×

மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை சேகரிப்பு ஆளுநர், துணைவேந்தர் மீது தேர்தல் அதிகாரியிடம் புகார்

கோவை: திராவிட பண்பாட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வெண்மணி தலைமையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலத்திற்கு வந்து நேற்று தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர். இதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட நாள் முதல் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் தவறாக பயன்படுத்தி வருகிறார். மாநில அரசிற்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார். மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்களின் விவரங்களை சேகரிக்க கவர்னர் அலுவலகத்தில் இருந்து கிடைத்த வாய்மொழி உத்தரவின் பேரில், பல பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடம் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை, பதிவெண், ஆதார் எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை நிர்பந்தம் செய்து தேர்தல் நேரத்தில் சேகரிக்க முயற்சி செய்தது.

இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போது உத்தரவு திரும்ப பெறுவது போன்ற செயலில் ஈடுபட்டு, தற்போது மீண்டும் அந்த வாய்மொழி உத்தரவின் பேரில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்களிடம் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண், பெயர், பதிவெண், வயது, பாலினம், சாதி, மின்னஞ்சல், தொலைபேசி எண், ஆதார் எண், பிறந்த தேதி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை மாணவர்களை கட்டாயப்படுத்தி பெற்று வருகின்றனர். கவர்னரின் நடவடிக்கைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உதவி செய்து வருகின்றனர். இதனை வைத்து மாணவர்களை பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க நிர்பந்தம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

* துணைவேந்தர் மறுப்பு
பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில், ‘‘மாணவர்களின் ஸ்காலர்ஷிப் வேண்டி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கூகுள் லிங்க் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டது. அதில், மாணவர்கள் தங்களின் விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மாணவர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்துள்ளனர். இந்த லிங்க் விவகாரத்தில் தற்போது ஏதோ தவறு நடந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய விளக்கம் அளிக்கப்படும்’’ என்றார்.

The post மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை சேகரிப்பு ஆளுநர், துணைவேந்தர் மீது தேர்தல் அதிகாரியிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dravida Cultural Movement ,Venmani ,Coimbatore District Collector ,RN ,Ravi ,Governor of Tamil Nadu ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்