×

பாஜவை கழற்றிவிட்டு அதிமுக கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில் விஜயபாஸ்கர் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு: புதுக்கோட்டையில் 2 இடங்களில் நடந்தது

விராலிமலை: பாஜவுடனான அதிமுக கூட்டணி முறித்து கொண்ட நிலையில், புதுக்கோட்டையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2013 முதல் 2021 வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இப்போது விராலிமலை தொகுதி எம்எல்ஏவாகவும், புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளராகவும் உள்ளார். இவரது வீடு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவில் உள்ளது. இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 மதிப்பில் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில், அவரது மனைவி ரம்யாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது மொத்தம் 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதேபோல் விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல் முறைகேடு வழக்கும் உள்ளது. இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதேபோல் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக 2021ல் விஜயபாஸ்கர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டுக்கு நேற்று காலை 8 மணிக்கு சென்னை, மதுரையில் இருந்து 3 கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அதில், ஒரு பெண் அதிகாரி உள்பட 12 பேர் இருந்தனர். அவர்கள் கணினி, லேப்டாப், எடை மெஷின், பணம் எண்ணும் மெஷினுடன் விஜயபாஸ்கரின் வீட்டுக்குள் சென்றனர். அப்போது விஜயபாஸ்கர், அவரது மனைவி அங்கு இல்லை. அவரது தந்தை சின்னதம்பி, தாய் அம்மாகண்ணு ஆகியோர் மட்டும் இருந்தனர்.

உள்ளே சென்ற அதிகாரிகள் அனைத்து கதவுகள், ஜன்னல் கதவுகளை அடைத்து விட்டு வீடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விஜயபாஸ்கரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காலை 8.30 மணியளவில் வீட்டுக்குள் இருந்து 4 அதிகாரிகள் மட்டும் வெளியே வந்து ஓலைமான்பட்டியில் உள்ள விஜயபாஸ்கரின் தோட்டத்து வீட்டிற்கு சென்று அங்கு சோதனை நடத்தினர். சுமார் 45 நிமிடம் இங்கு சோதனை நடந்தது. மேலும், காலை 8.15 மணியளவில் 4 பேரும் மீண்டும் சவுராஷ்டிரா தெருவில் உள்ள வீட்டுக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை சோதனை தொடர்ந்தது.

தமிழகத்தில் அதிமுக-பாஜ கூட்டணி கடந்தாண்டு செப்டம்பரில் முறிந்தது. இனி பாஜவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்தார். இதனிடையே மக்களவை தேர்தலும் நெருங்கியது. பாஜ தலைமை, தமாகா தலைவர் ஜி.கே.வாசனை தூது அனுப்பி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனாலும் எடப்பாடி பாஜவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. பிரதமர் மோடியே செல்போனில் தொடர்பு கொண்டும், எடப்பாடி செல்போனை எடுக்கவில்லை.

இதனால் பாஜவுக்கு, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலை உருவாகியது. நான்கரை ஆண்டு காலம் பாஜ தயவில் ஆட்சி சுவையை அனுபவித்து விட்டு, இப்போது எடப்பாடி தூக்கி எறிந்து விட்டதால் பாஜ மேலிடம் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பாஜவுடன், கூட்டணி வேண்டாம் என்று வலியுறுத்தியதில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முக்கிய பங்கு வகித்தாராம். இதனால் தான் இவரது வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்து வருவதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

* எதிர்க்கட்சிகளின் வீடுகளில் ரெய்டு தொடரும்
அதிமுக கூட்டணி நேற்றுதான் இறுதி செய்யப்பட்டது. அடுத்தநாளே அமலாக்கத்துறை சோதனை தொடங்கிவிட்டது. இனி எதிர்க்கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள், அவர்களுக்கு வேண்டியவர்களிடம் இனி வருமானவரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை தொடர்ந்து நடைபெறும். ஒவ்வொரு வாரமும் இந்த சோதனை நடக்கும். ஏன் தினமும் கூட நடந்தாலும் ஆச்சரியம் இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

The post பாஜவை கழற்றிவிட்டு அதிமுக கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில் விஜயபாஸ்கர் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு: புதுக்கோட்டையில் 2 இடங்களில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Enforcement ,Vijayabaskar ,Pudukottai ,AIADMK alliance ,BJP ,Viralimalai ,AIADMK ,minister ,C.Vijayabaskar ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED காவிரி நீரை களவாடுகிறார் விஜயபாஸ்கர்...