×

4 பீர் வகைகளுடன் குறைந்த விலையில் புதிதாக 12 மதுவகை விரைவில் அறிமுகம்: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

சென்னை: குறைந்த விலையில் 4 பீர் வகைகளுடன் 12 புதிய மது வகைகளை விரைவில் டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது. தமிழகத்தில் தற்போது 4,820 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கடைகளில் சாதாரண ரக, நடுத்தர மற்றும் உயர் ரகங்களில் விஸ்கி, பிராந்தி, ஓட்கா, ரம் உள்ளிட்ட மது வகைகளும், பீர் வகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் சாதாரண ரகத்தில் 43 வகை மதுபானங்கள், நடுத்தர ரகம் 49 வகை, உயர்தரம் 128 வகை, பீர் 35 வகை விற்பனையில் உள்ளது. சாதாரண ரகம் 180 மில்லி ரு.140க்கும், 750 மில்லி ரூ.560க்கும், நடுத்தர ரகம் 180 மில்லி ரு.170க்கும், 750 மில்லி ரூ.680க்கும், உயர் ரகம் 180 மில்லி ரு.200க்கும், 1,000 மில்லி ரூ.1,980க்கும், பீர் வகைகள் ரூ.140 முதல் 180 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் குறைந்த விலையில் 12 புதிய மது வகைகளை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லியில் செயல்படும் மதுபான ஆலை சாதாரண வகை மதுபானமாக வீரன் என்ற பிராந்தி வகையை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. குறைந்த விலையில் மது வாங்குவோருக்காக இந்த மதுபானம் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில், இதுபோன்ற புதிய மதுபான வகைகள் தேர்தல் முடிந்த பின் விற்பனைக்கு வரவுள்ளன. 4 பீர் வகைகளுடன் புதிதாக 12 மதுபான வகைகள் விற்பனைக்கு கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மக்களவை தேர்தல் முடிந்ததும், இவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வரும்.

தமிழகத்தில், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே, வீரன் மதுபானத்திற்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது. மதுபானங்களின் விலைகள் உயர்த்தப்பட்ட பிறகு, குறைந்த விலை மதுபானங்களின் விற்பனைதான் அதிகரித்து மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் உள்ளது. நடுத்தர மதுபானங்களை வாங்கி வந்த பல மது பிரியர்கள், தற்போது சாதாரண வகை மதுபானங்களை வாங்க தொடங்கிவிட்டதையே விற்பனை விவரம் காட்டுகிறது. எனவே குறைந்த விலை மது வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post 4 பீர் வகைகளுடன் குறைந்த விலையில் புதிதாக 12 மதுவகை விரைவில் அறிமுகம்: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு டாஸ்மாக்...