×

பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்வது குறித்து ஆளுநர் ரவிக்கு 24 மணி நேரம் கெடு: சட்டம் தெரியாதா? அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதா? உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

சென்னை: பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது. ஆளுநருக்கு சட்டம் தெரியுமா? தெரியாதா? உச்ச நீதிமன்றத்தோடு விளையாட வேண்டாம் என்று எச்சரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க ஆளுநருக்கு 24 மணி நேர கெடுவிதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். கடந்த 2006-11ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தின்போது தமிழ்நாடு உயர்கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார்.

கடந்த 2011ல் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், பொன்முடிக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து இருந்தார். இதனால், பொன்முடியின் எம்எல்ஏ, அமைச்சர் பதவி பறிபோனது.

மேற்கண்ட வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இருவரையும் குற்றவாளி என்று பிறப்பித்த உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் வழங்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனை ஆகியவற்றை இடைக்காலமாக நிறுத்தி வைத்து கடந்த 11ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பொன்முடி மீண்டும் பேரவை உறுப்பினராக தேர்வானார். இதைத்தொடர்ந்து பொன்முடியை அமைச்சரவையில் சேர்க்க முடிவெடுத்து அது தொடர்பான பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்து இருந்தார். ஆனால் முதல்வர் அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்து கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து, பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்“ என்று தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில வழக்கு தொடரப்பட்டது.
மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் தனது வாதத்தில், “இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக இது ஒரு அமைச்சர் சார்ந்த ஒன்றாகும். பொன்முடிக்கு விதிக்கப்பட்டது தண்டனையும், குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உள்ளது. முதல்வரின் பரிந்துரைப்படி பொன்முடிக்கு தமிழ்நாடு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுக்கிறார். இந்த செயல் அரசியல் அமைப்புக்கு எதிரானதாகும். ஆளுநருக்கு இதுபோன்ற அதிகாரத்தை யார் வழங்கியது. குறிப்பாக தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தகுதி நீக்கம் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் பேரவை உறுப்பினரான ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க ஆளுநர் எப்படி மறுப்பு தெரிவிக்க முடியும்.

மேலும், முதல்வர் பரிந்துரை செய்த ஒருவருக்கு நான் பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என ஆளுநர் கூறியுள்ளது என்பது அரசியல் சாசன விதிகளுக்கு புறம்பானது ஆகும். ஆளுநர் ஆர்.என்.ரவியின் இதுபோன்ற நடவடிக்கையால் ஒவ்வொரு முறையும் இவ்வாறு நீதிமன்றத்தை தான் நாங்கள் நாட வேண்டுமா என்ற கேள்வி எங்களுக்கு எழுகிறது. குறிப்பாக தண்டனை நிறுத்தி வைத்த பிறகு பொன்முடிக்கு மீண்டும் பேரவை உறுப்பினர் பதவி திரும்ப கிடைத்து விடும். ஆனால் அமைச்சர் பதவிக்கு திரும்பவும் பதவிப் பிரமாணம் எடுத்துதான் ஆக வேண்டும். அந்த சட்ட விதிகள் கூட ஆளுநருக்கு தெரியவில்லையா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

மேலும் பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் திட்டமிட்டு தவறு இழைத்துள்ளார் என்பதில் சிறிதளவும் சந்தேகம் கிடையாது. ஏற்கனவே சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி கொடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்தார். பின்னர் உச்ச நீதிமன்றம் அந்த விவகாரத்தில் தலையிட்டவுடன்தான் குடியரசுத் தலைவருக்கு அதனை அனுப்பி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தான் தற்போது ஒருவரை அமைச்சராக்க மாநில முதல்வர் பரிந்துரைத்ததை ஆளுநர் நிராகரித்துள்ளார். இந்த நடவடிக்கை என்பது அரசியல் சாசனத்தின்படி மிகவும் விநோதமாக இருக்கிறது. இதனை ஏற்கவே முடியாது“ என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி ’ இந்த வழக்கை நாளைக்கு (இன்று)ஒத்தி வையுங்கள். இதுகுறித்து விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவிக்கிறோம்“ என்று கூறினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “ இந்த விவகாரத்தை பொறுத்தவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன செய்கிறார் என்பது அவருக்கு தெரிகிறதா அல்லது இல்லையா? அவருக்கு சட்டம் தெரியுமா? தெரியாதா? ஒரு மாநிலத்தின் முதல்வர் கொடுக்கும் பரிந்துரையை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும். அதற்கான அதிகாரம் அவருக்கு கிடையாது.

குறிப்பாக யாரை அமைச்சரவையில் சேர்ப்பது என்பது முதல்வரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதில் ஆளுநர் எப்படி தலையிட முடியும்? அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக ஆளுநர் செயல்படலாமா? இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு ஒன்றிய அரசு தரப்பில் இருந்து ஆலோசனை கூற வேண்டும். இல்லை என்றால் கடுமையான கருத்துகளை உச்ச நீதிமன்றத்தின் தரப்பில் இருந்து பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இந்த விவகாரத்தில் அமைச்சராக மீண்டும் பொன்முடி பதவி பிரமாணம் எடுக்க வேண்டுமா? அல்லது நேரடியாக அவருக்கு முதல்வர் துறைகளை ஒதுக்கலாமா ? என்று கேட்டார். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், “இந்த விவகாரத்தில் நேரடியாக துறைகளை ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும் பதவிப் பிரமாணம் தேவையில்லை எனவும் நீதிமன்றம் தெரிவிக்க வேண்டும்“ என்று கூறினார்.

மீண்டும் பேசிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ’“பொன்முடி விவகாரத்தில் முடிவெடுக்க ஆளுநருக்கு நாளை(இன்று) வரை உச்ச நீதிமன்றம் கெடு வழங்குகிறது. இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கை வேறு விதமாக இருக்கும். அதனை தற்போது கூற முடியாது. மேலும் ஆளுநருக்கு நாங்களே உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை வரும். குறிப்பாக அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு ஆளுநர் நடக்க வேண்டும் என நேரடியாக நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டியது இருக்கும். மேலும் ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக கடும் கருத்துக்களை உச்ச நீதிமன்றம் கூற வேண்டியது வரும். ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன உச்ச நீதிமன்றத்தின் சட்ட விதிகளுக்கு எதிராக விளையாடுகிறாரா என்று சரமாரி கேள்வி எழுப்பியதோடு வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார். பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் 24 மணி நேர கெடு விதித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்வது குறித்து ஆளுநர் ரவிக்கு 24 மணி நேரம் கெடு: சட்டம் தெரியாதா? அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதா? உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor Ravi ,Supreme Court ,Chennai ,Tamil ,Nadu ,Governor RN Ravi ,Ponmudi ,Chief Justice ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்...