×

வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

சென்னை: சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை டிடிகே.சாலையில் பிரபல கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் பெங்களூரு மற்றும் தமிழ்நாடு முழுவதும் தனது கட்டுமான பணிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2021-22ம் நிதியாண்டில் முறையாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள் மற்றும் பங்குதாரர்களாக உள்ள கல்வி நிறுவன அதிபருக்கு சொந்தமான 50 இடங்களில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து, மீண்டும் இரண்டாவது முறையாக சென்னை டிடிகே சாலையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் பகுதாரர்களாக உள்ள கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான 10 இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் இரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள், துணை ராணுவ வீரர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னை டிடிகே.சாலையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு 4 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர்.

அதேபோல், கட்டுமான நிறுவனத்தின் கிளை அலுவலகங்களான நீலாங்கரையில் உள்ள பாலா இல்லம், அண்ணாநகர், எழும்பூர், அடையாறு பகுதிகளில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. மேலும், அதன் பங்குதாரர்களாக உள்ள பிரபல கல்வி நிறுவனத்தின், சென்னை நந்தனத்தில் உள்ள தலைமை அலுவலகம், தரமணியில் உள்ள ஐடி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடந்தது. இதில் பென் டிரைவ், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Income Tax Department ,Chennai ,DDK Road, Chennai ,Bengaluru ,Tamil Nadu ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...