×

தேர்தல் பத்திர எண்கள் உட்பட முழு விவரம் இணையதளத்தில் வெளியீடு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேர்தல் பத்திரங்களின் எண்கள், தேதி உள்ளிட்ட முழு விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திற்கு நேற்று வழங்கியது. அந்த விவரங்கள் உடனடியாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ஒன்றிய பாஜ அரசு கடந்த 2018ம் ஆண்டு அமல்படுத்தியது. இந்த திட்டம் மூலம் நன்கொடை வழங்கும் நபர்கள், நிறுவனங்களின் பெயர் வெளியிடப்படாது. அதே போல, எந்த கட்சி யாரிடம் இருந்து நன்கொடை பெற்றது என்கிற விவரமும் ரகசியமாக இருக்கும்.

இதன் மூலம் மிகப்பெரிய ஊழல் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து கடந்த மாதம் 16ம் தேதி தீர்ப்பளித்தது. அதோடு, மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து நன்கொடை விவரங்களை வெளியிடவும் எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் பத்திரங்களை வாங்கிய நபர்கள், அதை பணமாக்கிய கட்சிகள் என தனித்தனியாக தகவல்களை பராமரிப்பதால் அவற்றை தொகுத்து வழங்க 4 மாத கூடுதல் அவகாசம் வேண்டுமென எஸ்பிஐ தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மார்ச் 12ம் தேதிக்குள் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க எஸ்பிஐக்கு உத்தரவிட்டது. அதன்படி, மார்ச் 12ம் தேதி மாலை தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது. அவை அனைத்தும் கடந்த 14ம் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அந்த தகவல்கள் மூலம், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ஆளும் பாஜ கட்சி சுமார் ரூ.8,250 கோடி வரை நன்கொடை பெற்றிருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, பல நிறுவனங்களை பாஜ கட்சி அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டு மூலம் மிரட்டி தேர்தல் நன்கொடை வசூலிப்பதிருப்பதும் ஆதாரப்பூர்வமாக வெளியானது. பாஜவுக்கு நன்கொடை தந்த நிறுவனங்கள், ரெய்டை தொடர்ந்து அடுத்த சில வார, மாத இடைவெளியில் தேர்தல் பத்திரங்களை வாங்கியிருப்பது அம்பலமானது.

அதே சமயம், எஸ்பிஐ வெளியிட்ட தகவலில் தேர்தல் பத்திரங்களின் எண்கள், குறிப்பு எண் (யுஆர் எண்) உள்ளிட்ட தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக, எந்த நிறுவனங்கள், எந்த கட்சிக்கு நிதி தந்தது என்கிற விவரங்களை அறிய முடியவில்லை. இதற்கிடையே கடந்த 18ம் தேதி தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்பிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம் என எச்சரித்ததுடன், மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம் எண், குறிப்பு எண் உள்ளிட்ட முழு தகவல்களையும் வெளியிட வேண்டுமென உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், தேர்தல் பத்திரம் தொடர்பான முழு விவரங்களையும் எஸ்பிஐ வங்கி நேற்று தேர்தல் ஆணையத்திடம் வழங்கியதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இந்த தகவல்கள் உடனடியாக நேற்று மாலை தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தகவலில் தேர்தல் பத்திரங்களின் எண்கள் வெளியிடப்பட்டதால், எந்த கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு நிதி அளித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதன்படி, ரிலையன்ஸ் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் பாஜவுக்கு அதிகமாக நிதி கொடுத்திருப்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.

குவிக் சப்ளை நிறுவனம் பாஜவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் ரூ.385 கோடி நிதி தந்துள்ளது. இந்நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனம் வைத்துள்ளது. 2022-23 மற்றும் 2023-24ம் நிதியாண்டுகளில் இந்நிறுவனம் ரூ.410 கோடிக்கான பத்திரங்களை வாங்கி அதில் ரூ.385 கோடியை பாஜவுக்கும் ரூ.25 கோடியை சிவசேனா கட்சிக்கும் தந்துள்ளது. அதே போல, ரிலையன்சுடன் தொடர்புடைய மற்றொரு நிறுவனமான ஹனிவெல் புராபர்டீஸ் நிறுவனம் 2021 ஏப்ரல் 8ம் தேதி ரூ.30 கோடிக்கான பத்திரம் வாங்கி முழுவதும் பாஜவுக்கே தந்துள்ளது. இதே போல தேர்தல் பத்திரம் தொடர்பாக இன்னும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* பிரமாண பத்திரத்தில் எஸ்பிஐ கூறியது என்ன?
அந்த பிரமாண பத்திரத்தில், ‘தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள் மற்றும் அதனை தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைத்துக்கொண்ட கட்சிகள் குறித்த முழு விவரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரங்களை வாங்கியவர்களின் பெயர்கள், அத மதிப்பு, பத்திரங்களின் எண்கள், பத்திரங்களை பணமாக்கிய கட்சிகளின் பெயர்கள், அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கு எண்களின் கடைசி நான்கு இலக்கங்கள் மற்றும் மதிப்புகள் என அனைத்து விவரங்களும் பகிரப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, முழு வங்கிக் கணக்கு எண்களும், வாடிக்கையாளர் விவரங்களும் பகிரப்படவில்லை. அதேநேரத்தில், அரசியல் கட்சிகளை அடையாளம் காண அவை தேவையில்லை‘ என்று தெரிவித்துள்ளது.

* மொத்தம் 938 பக்கம்
தேர்தல் ஆணையம் நேற்று தனது இணையதளத்தில் மொத்தம் 938 பக்கங்கள் கொண்ட 2 ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில் கட்சிகள் பெற்ற நிதி தொடர்பான ஆவணம் 552 பக்கமும், நிறுவனங்கள் தந்த நிதி தொடர்பான ஆவணம் 386 பக்கமும் கொண்டுள்ளது. முன்னதாக கடந்த 14ம் தேதி வெளியிட்ட போது, மொத்தம் 763 பக்கங்கள் கொண்ட 2 ஆவணங்கள் (337 + 426) வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* பாஜவுக்கு லாட்டரி மார்டின் தந்தது எவ்வளவு?
தேர்தல் பத்திரங்களை அதிகளவில் வாங்கிய நிறுவனங்கள் பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான ப்யூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சேவைகள் நிறுவனம் முதலிடத்தல் உள்ளது. இந்த நிறுவனம் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி உள்ளது. இந்நிறுவனம், மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு ரூ.540கோடியும், பாஜவுக்கு ரூ.100 கோடியும், ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு ரூ.150 கோடிக்கு அதிகமாகவும் நிதி கொடுத்துள்ளதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

The post தேர்தல் பத்திர எண்கள் உட்பட முழு விவரம் இணையதளத்தில் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,State Bank of India ,Election Commission ,Supreme Court ,Electoral Commission ,Dinakaran ,
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை