×

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை தொடர்ந்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது: மதுபான கொள்கை வழக்கில் வீட்டில் சோதனை நடத்திய பின் அமலாக்கத்துறை அதிரடி; துணை முதல்வர் சிசோடியா, சஞ்சய் சிங் எம்.பி திகார் சிறையில் உள்ள நிலையில் நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் நேற்று சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதனால் டெல்லியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா அண்மையில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிராக நீதிமன்றங்களில் சட்டப்போராட்டம் நடத்தி வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் 9வது முறையாக கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு ேநற்று தள்ளுபடி ஆனது. இதற்கிடையே, டெல்லி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததை அடுத்து அமலாக்கத்துறை நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும் என்றும் வழக்கை அவசர மனுவாக விசாரிக்க கோரப்படும் என கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள கெஜ்ரிவாலின் வீட்டில் சோதனை நடத்துவதற்கு நேற்று இரவு 7.15 மணிக்கு சென்றனர். அமலாக்கத்துறையின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் கபில் ராஜ் தலைமையில் தலைமையில் 12 பேர் கொண்ட குழு கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்றது. அவர்களின் பாதுகாப்புக்காக டெல்லி காவல்துறையினரும் சென்றனர். அதிகாரிகள் கெஜ்ரிவால் வீட்டுக்குள் சென்று சோதனையை தொடங்கியதும் வீட்டை சுற்றிலும் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய பாதுகாப்பு படையான ஆர்ஏஎப் மற்றும் இதர பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்களும் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர்.

கெஜ்ரிவால் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் ஆம் ஆத்மியை சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமான தொண்டர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாகவும், ஒன்றிய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். ஆம்ஆத்மியின் மூத்த தலைவர்களும் அங்கு வந்திருந்தனர். இரண்டு மணி நேர சோதனைக்கு பின்னர், நேற்றிரவு 9.15 மணிக்கு கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் வீட்டை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதல்வராக பதவி வகிக்கும் ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்வது இது 2 வது முறையாகும். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் முதல்வர் கண்டனம்: கெஜ்ரிவால் கைது குறித்து பஞ்சாப் ஆம்ஆத்மி முதல்வர் பகவந்த் மான் கூறுகையில்,’ பாஜவின் அரசியல் அணியான அமலாக்கத்துறையால் கெஜ்ரிவாலை கைது செய்ய முடியும். ஆனால் கெஜ்ரிவாலின் சிந்தனையை தடுக்க முடியாது. அவரை சிறையில் தள்ளினாலும் அவரது சிந்தனையை ஒரு போதும் அடக்க முடியாது. ஆம் ஆத்மி கட்சியால் மட்டுமே பாஜவை தடுத்து நிறுத்த முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* ஆம் ஆத்மி தலைவர்கள் கண்டனம்
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு டெல்லி சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல், டெல்லி மாநகராட்சி மேயர் ஷெல்லி ஒபராய் ஆகியோர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா,’கெஜ்ரிவாலுக்கு கோடிக்கணக்கான மக்களின் ஆசீர்வாதம் உள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அவரை கைது செய்வதற்கு மிக பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டது. டெல்லி,பஞ்சாப்பில் உள்ள அரசுகள் செய்த பணிகளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் விவாதிக்கின்றனர். கெஜ்ரிவாலை நீங்கள் கைது செய்யலாம், அவரது கொள்கைகளை அல்ல’ என்று தெரிவித்தார்.

* வெட்ககேடானது பிரியங்கா கண்டனம்
கெஜ்ரிவால் கைது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,’அரசியலை இப்படித் தாழ்த்துவது பிரதமருக்கோ, அவரது அரசுக்கோ பொருந்தாது. தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவாலை குறிவைப்பது தவறானது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது போன்ற ஒரு வெட்கக்கேடான காட்சி முதல்முறையாக பார்க்கப்படுகிறது’ என்றார்.

* முதல்வர் பதவி ராஜினாமா இல்லை
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் அவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அடிசி கூறுகையில்,‘‘ கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார். சிறையில் இருந்தபடியே அவர் அரசை நடத்துவார்’’ என்றார்.

* இரவு 11.15 மணிக்கு அழைத்து சென்ற ஈடி
நேற்றிரவு சுமார் 9.15 மணி அளவில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டின் முன்பாக ஆம் ஆத்மி தொண்டர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்திய பிறகு, இரவு 11.15 மணி அளவில் கெஜ்ரிவாலை அவரது வீட்டிலிருந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றனர். இரவு முழுவதும் அமலாக்கத்துறை அலுவலகத்திலேயே கெஜ்ரிவால் தங்க வைக்கப்படுவார் என அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர்.

காஷ்மீர் முன்னாள் முதல்வரான பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தி தனது டிவிட்டரில், ‘‘மற்றொரு முதல்வரை அமலாக்கத்துறை தன்னிச்சையாக கைது செய்தது அரசியல் பழிவாங்கல் மற்றும் அதிகரித்து வரும் எதேச்சாதிகாரத்தை தூண்டுகிறது. இந்த கோழைத்தனமான செயல், தேர்தலை சந்திக்க அவநம்பிக்கையுடன் உள்ள ஆளும் பாஜ கட்சியின் அச்சத்தை அம்பலப்படுத்தி உள்ளது. நாங்கள் பயப்பட மாட்டோம்’’ என கூறி உள்ளார்.

கேரள முதல்வர் பினராய் விஜயன் அளித்த பேட்டியில், ‘‘கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் ஆட்சேபனைக்குரியது. தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்களை முடக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயக செயல்முறைக்கு அஞ்சுபவர்களின் கோழைத்தனமான செயல் இது’’ என்றார்.

ஆர்ஜேடி தலைவரும், பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் தனது டிவிட்டரில், ‘‘ஜனநாயக முறையில் எதிர்க்கட்சிகளை எதிர்த்துப் போராடுவதற்கு பதிலாக, புலனாய்வு அமைப்புகள் மற்றும் பிற அரசியலமைப்பு அமைப்புகளின் உதவியுடன் பாஜ தேர்தலை சந்திக்க விரும்புகிறது என்பதை கெஜ்ரிவால் கைது தெளிவாக காட்டுகிறது. அரசியல், ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு அறநெறி மற்றும் கண்ணியத்தை மீறி, பாஜ அரசு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை நாட்டில் விதித்துள்ளது’’ என்றார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது டிவிட்டரில், ‘‘கெஜ்ரிவாலின் கைது, பாஜ ஆட்சியை பிடிக்க எந்த அளவிற்கும் செல்லும்் என்பதை காட்டுகிறது. கெஜ்ரிவாலுக்கு எதிரான இந்த அரசியல் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைக்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது’’ என்றார்.

The post ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை தொடர்ந்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது: மதுபான கொள்கை வழக்கில் வீட்டில் சோதனை நடத்திய பின் அமலாக்கத்துறை அதிரடி; துணை முதல்வர் சிசோடியா, சஞ்சய் சிங் எம்.பி திகார் சிறையில் உள்ள நிலையில் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Kejriwal ,Jharkhand ,Hemant Soran ,Deputy Chief Sisodia ,Sanjay Singh M. Action ,B Dikhar ,New Delhi ,Kejriwal ,P Dikar ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு; மாஜி...