திருக்கழுக்குன்றம்: குன்னத்தூர் ஊராட்சியில் பட்டா நிலங்களை வருவாய் துறை அதிகாரிகள் அனாதீனமாக்கியதை கண்டித்து, இன்று காலை முதல் அப்பகுதி மக்கள் போஸ்டர் அடித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட குன்னத்தூர் ஊராட்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நீண்ட காலமாக வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் வீட்டுமனை மற்றும் விளைநிலம் உள்பட 485 ஏக்கர் நிலத்தை கடந்த 1997ம் ஆண்டு பட்டா நிலங்கள் என அரசு அறிவித்தது. ஆனால் அவற்றை, கடந்த ஆண்டு ‘அனாதீனம்’ என்று வருவாய் துறையின் கணக்கில் மாற்றப்பட்டு உள்ளது.
இதை ஏற்கெனவே அரசு அறிவித்தபடி பட்டா நிலங்களாக மீண்டும் மாற்றித்தர உரிய நடவடிக்கை வேண்டும் என்று குன்னத்தூர் ஊராட்சி மக்கள் ஓராண்டாக போராடி வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்நிலையில், வருவாய்துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கை கண்டித்தும், மீண்டும் அவற்றை பட்டா நிலங்களாக மாற்றித்தரக்கோரியும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஆங்காங்கே போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
The post வருவாய்துறை அதிகாரிகளை கண்டித்து குன்னத்தூரில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் appeared first on Dinakaran.