×

சேப்பாக்கத்தில் களைகட்டும் கிரிக்கெட் திருவிழா: 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை துவக்கம்.! முதல் போட்டியில் சிஎஸ்கே-ஆர்சிபி மோதல்

சென்னை: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 17வது ஐபிஎல் தொடர் நாளை தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனும், 5 முறை பட்டம் வென்றுள்ள அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ், இதேபோல் 5 முறை பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. நாடாளுமன்ற தேர்தலையொட்டி 21 போட்டிக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும். லீக், பிளேஆப், பைனல் உள்பட மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்படுகிறது. வார இறுதி நாட்களில் மட்டும் 2 போட்டி நடக்கிறது.

அந்தநாட்களில் முதல் போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். மற்ற போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். மே 26ம் தேதி இறுதிபோட்டி நடைபெறும் என தெரிகிறது. இதனால் நாளை தொடங்கி அடுத்த 2 மாதத்திற்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. முன்னதாக நாளை மாலை 6.30 மணிக்கு கண்கவர் தொடக்க விழா நடக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் நடிகர்கள் அக்சய்குமார், டைகர் ஷெராப், பாடகர் சோனுநிகாம் ஆகியோர் பங்கேற்று ரசிகர்களை மகிழ்விக்கின்றனர்.

தொடர்ந்து இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கேப்டன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் சொந்த மண்ணில் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது. காயத்தால் கான்வே இல்லாத நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ரச்சின் ரவீந்திரா தொடக்க வீரராக களம் இறங்குகிறார். ரகானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ஜடேஜா, தீபக் சாகர், ஷர்துல் தாகூர் மகேஷ் தீக்‌ஷனா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பிடிக்கலாம். உலக கோப்பையில் கவனம் ஈர்த்த ரச்சின் ரவீந்திரா (ரூ1.8 கோடி), டேரில் மிட்செல் ரூ.14 கோடி) முதன்முறையாக ஐபிஎல்லில் கால் பதிப்பதால் எதிர்பார்ப்பு உள்ளது.

மறுபுறம் டூபிளசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணியில் அவருடன் கோஹ்லி தொடக்க வீரராக களம் இறங்குவார். கேமரூன் கிரீன், ரஜத் படிதார், மேக்ஸ்வெல், சுய்யாஷ் பிரபுதேசாய், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், மயங்க் டாகர், அல்சாரி ஜோசப், முகமது சிராஜ்க்கு இடம் கிடைக்கலாம். இதுவரை நடந்துள்ள 16 சீசனில் ஒருமுறை கூட ஆர்சிபி பட்டம் வென்றதில்லை. அண்மையில் மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபி பட்டம் வென்ற நிலையில் ஆடவர் அணி, முதல்முறையாக மகுடம் சூடுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. முதல் போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன.

The post சேப்பாக்கத்தில் களைகட்டும் கிரிக்கெட் திருவிழா: 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை துவக்கம்.! முதல் போட்டியில் சிஎஸ்கே-ஆர்சிபி மோதல் appeared first on Dinakaran.

Tags : Weeding ,festival ,Chepauk ,IPL ,CSK ,RCB ,CHENNAI ,Chennai Super Kings ,Mumbai Indians ,Rajasthan Royals ,Delhi ,Dinakaran ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...