- தேர்தல் ஆணையம்
- மத்திய அரசு பத்திரம்
- தில்லி
- யூனியன் அரசு
- உச்ச நீதிமன்றம்
- அனுப் சந்திர பாண்டே
- தின மலர்
டெல்லி : தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரும் மனுவுக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்து பிரமானப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஒய்வு பெற்ற நிலையில், மற்றொரு தேர்தல் ஆணையம் அருண் கோயல், திடீரென பதவி விலகினார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் நியமன சட்டத்தின் படி, தேர்தல் ஆணையர்களை நியமிக்க அரசுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. தேர்தல் ஆணையர்கள் தேர்வு குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என 2023ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு மாறாக இந்த சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது.
இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் கொண்ட தேர்வு குழு கூடி புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சாந்து ஆகிய இருவரை தேர்வு செய்தது. ஆனால் உத்தேச பட்டியலை தம்மிடம் அளிக்கவில்லை என்று கூறி இதற்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்திற்கு எதிரான வழக்கில் ஒன்றிய சட்ட அமைச்சகம் தாக்கல் செய்த 138 பக்க பிரமாண பத்திரத்தில் தேர்தல் ஆணையர்கள் அவசர கதியில் நியமிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் மட்டும் போதாது என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.
தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றவர்களின் தகுதி குறித்து கேள்வி எழுப்பப்படவில்லை என்றும் நியமிக்கப்பட்டவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் கூறப்படவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. எனினும் அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தவே தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் உள்நோக்கம் இருப்பதாக ஆதாரமற்ற கேடு விளைவிக்கும் குற்றச் சாட்டுகள் கூறப்படுவதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களால் தான் 1950 முதல் 2023ம் ஆண்டு வரை 73 ஆண்டுகளாக தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு வந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. தேர்வுக்குழுவில் நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் இருப்பதால் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு சார்பற்ற தன்மையும் சுதந்திரமான செயல்பாடும் வந்து விடாது என்றும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது.
The post தேர்வுக்குழுவில் நீதிபதி இருப்பதால் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு சார்பற்ற தன்மை வந்துவிடாது : ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் appeared first on Dinakaran.