×

மோடி ‘ரோடு ஷோ’வில் சீருடையில் பள்ளி மாணவர்கள் பாஜவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

கோவை: கோவையில் நடந்த மோடி ‘ரோடு ஷோ’வில் சீருடையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக விளக்கம் கேட்டு பாஜ மாவட்ட தலைவருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சி கடந்த 18ம் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி சீருடையில் அழைத்து வரப்பட்டனர். இதில் சில மாணவர்களுக்கு ராமர், சீதா, அனுமன் வேடம் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கப்பட்டனர். தேர்தல் பிரசார கூட்டத்தில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைக்கக்கூடாது என்ற தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளதால் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன. மேலும், தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ரோடு ஷோ நிகழ்ச்சியில் மாணவர்களை சீருடையின் பங்கேற்க வைத்த கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் ராமர் வேடம் அணிவித்த வடவள்ளி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆகிய 2 பள்ளி நிர்வாகத்துக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மாணவர்களை கட்டாயப்படுத்தி பிரசாரத்தில் அழைத்து வந்தது தொடர்பாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் அந்த பள்ளிக்கு நேற்று முன்தினம் நேரில் சென்று தலைமை ஆசிரியர் அழகுவடிவுவிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

மேலும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சம்பவம் குறித்து பாஜ நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி பாஜ மாவட்ட தலைவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாஜ மாவட்ட நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தை அடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

 

The post மோடி ‘ரோடு ஷோ’வில் சீருடையில் பள்ளி மாணவர்கள் பாஜவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : EC ,BJP ,Modi ,Coimbatore ,Election Commission ,
× RELATED சசி தரூருக்கு தேர்தல் ஆணையம்...