×

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒரே நாளில் 4 பேரிடமிருந்து ரூ.4.40 லட்சம் பறிமுதல்: பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது, பரிசுப் பொருள் கொடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக ஒவ்வொரு தொகுதிக்கும் 3 தேர்தல் பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் முக்கிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டு உரிய ஆவணம் இன்றி கொண்டுவரும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி கோபி தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பேக்குடன் வந்த ஒருவரைப் பிடித்து சோதனை செய்தபோது, அதில் அவர் பணம் வைத்திருந்தது தெரிய வந்தது.

அந்த பணம் யாருடையது என்று கேட்டபோது ஏடிஎம்மில் செலுத்துவதற்காக கொண்டு வந்தேன் என்று கூறினார். உரிய ஆவணம் இல்லாததால் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுபோன்று மொத்தம் 4 பேரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணத்தை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆவணம் இன்றி கொண்டுவரும் பணத்தை பறிமுதல் செய்வதால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள், கடை உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு தேர்தல் ஆணையம் உரிய வழிகாட்டு நெறிமுறையை அறிவிக்க வேண்டும் என்றும், வியாபாரிகள், கடை உரிமையாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

The post மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒரே நாளில் 4 பேரிடமிருந்து ரூ.4.40 லட்சம் பறிமுதல்: பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...