×
Saravana Stores

21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 11 பேர் புதுமுகங்கள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: தமிழகத்தில் போட்டியிடும் 21 பேர் கொண்ட திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இந்த பட்டியலில், 10 பேருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. 11 புது முகங்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 3 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு ஏப்ரல் 19ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் தொடங்கிவிட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது, தேர்தல் அறிக்கை வெளியிடுவது என உச்ச கட்ட பரபரப்பில் உள்ளன.

இந்நிலையில் திமுக கூட்டணி மட்டும் முன் கூட்டியே தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துவிட்டது. கூட்டணிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடும் முடிந்து விட்டது. அதன்படி, திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுரை, கரூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகள் அடங்கும். மதிமுகவுக்கு ஒரு தொகுதி(திருச்சி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை, விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம், கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. மீதம் உள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் திமுகவில் 40 தொகுதிகளுக்கும் ஏற்கனவே விருப்ப மனு வாங்கப்பட்டது. விருப்ப மனு செய்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த தலைவர்கள் கடந்த 12ம் தேதி நேர்காணல் நடத்தினர். அவர்களில் இருந்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று திமுக வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவரை மூத்த தலைவர்கள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து அவர் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.

அதில், மத்திய சென்னை -தயாநிதி மாறன், வடசென்னை-கலாநிதி வீராசாமி, தென்சென்னை- தமிழச்சி தங்கப்பாண்டியன், ஸ்ரீபெரும்புதூர்-டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம்- ஜி.செல்வம், அரக்கோணம்-ஜெகத்ரட்சகன், வேலூர்-கதிர் ஆனந்த், தர்மபுரி-ஆ.மணி, திருவண்ணாமலை-சி.என்.அண்ணாதுரை, ஆரணி-தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி-மலையரசன், சேலம்-டிஎம்.செல்வகணபதி, ஈரோடு-பிரகாஷ், நீலகிரி-ஆ.ராசா, கோவை-கணபதி பா ராஜ்குமார், பொள்ளாச்சி-கே.ஈஸ்வரசாமி, பெரம்பலூர்-அருண்நேரு, தஞ்சாவூர்-ச.முரசொலி, தேனி-தங்கதமிழ்செல்வன், தூத்துக்குடி- கனிமொழி, தென்காசி-ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்தப் பட்டியலில், தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன், டி.ஆர்.பாலு, செல்வம், ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், சி.என்.அண்ணாதுரை, ராசா, கனிமொழி ஆகிய 10 எம்பிக்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை திமுக எம்பிக்களாக இருந்த தர்மபுரி செந்தில்குமார், கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி, சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன், பொள்ளாச்சி சண்முகசுந்தரம், தஞ்சாவூர் பழனிமாணிக்கம், தென்காசி தனுஷ்குமார் ஆகிய 6 எம்பிக்களுக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 22ம்தேதி மாலை திருச்சி மாவட்டம் சிறுகனூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முதல் பிரசாரம் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

* புதியவர்களுக்கு வாய்ப்பு
3 தொகுதிகள் காங்கிரசிடம் இருந்து பெறபட்டு, திமுக வெற்றி பெற்ற 3 தொகுதிகள் காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்தமுறை பெரம்பலூர் தொகுதி ஐஜேகவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த முறை திமுகவே போட்டியிடுகிறது. இதனால் மொத்தம் 11 பேர் புதிய வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். மேலும் பெண்கள் 3 பேர், பட்டதாரிகள் 19 பேர், முதுநிலை பட்டதாரிகள் 3 பேர், மருத்துவர்கள் 2 பேர், வக்கீல்கள் 6 பேர், முனைவர்கள் 2 பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* களத்தில் நேரடியாக மோதும்
திமுக – அதிமுக வேட்பாளர்கள்
திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் மற்றும் அதிமுக போட்டியிடும் 16 பேர் அடங்கிய முதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 8 தொகுதிகளில் திமுக – அதிமுக நேரடியாக மோதுகிறது.
அதன் விவரம் வருமாறு:
தொகுதி வேட்பாளர்கள்
திமுக அதிமுக
வடசென்னை கலாநிதி வீராசாமி ராயபுரம் மனோ
தென்சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் ஜெயவர்தன்
காஞ்சிபுரம் (தனி) செல்வம் இ.ராஜசேகர்
அரக்கோணம் ஜெகத்ரட்சகன் ஏ.எல்.விஜயன்
ஆரணி தரணிவேந்தன் ஜி.வி.கஜேந்திரன்
சேலம் செல்வகணபதி பி.விக்னேஷ்
தேனி தங்கதமிழ்செல்வன் வி.டி.நாராயணசாமி
ஈரோடு பிரகாஷ் ஆற்றல் அசோக்குமார்

The post 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 11 பேர் புதுமுகங்கள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : DMK ,CM Stalin ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,Tamil Nadu ,
× RELATED திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி,...