×

இரட்டை ரயில்பாதை சிக்னல் பணிகள் காரணமாக நெல்லை-நாகர்கோவில் பாசஞ்சர் ரயில் 23ம் தேதி முதல் 5 தினங்களுக்கு ரத்து

நெல்லை: இரட்டை ரயில்பாதை சிக்னல் பணிகள் காரணமாக நெல்லை – நாகர்கோவில் பாசஞ்சர் ரயில் வரும் 23ம்தேதி முதல் 5 தினங்களுக்கு ரத்து செய்யப்பட உள்ளது. அந்தியோதயா, புதுச்சேரி எக்ஸ்பிரஸ்கள் நெல்லையில் இருந்து இயக்கப்பட உள்ளன. குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி தொடங்கி நாகர்கோவில் சந்திப்பு மற்றும் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில்பாதை சிக்னல் பிரிவு பணிகள் நடக்க உள்ளன. இதையடுத்து நெல்லை வழியாக நாகர்கோவில் செல்லும் சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளன. இப்பணிகள் காரணமாக நெல்லை – நாகர்கோவில் பாசஞ்சர் ரயில் (எண்.06642), மறுமார்க்கமாக நாகர்கோவில் – நெல்லை பாசஞ்சர் ரயில் (எண்.06641) ஆகியவை வரும் 23ம்தேதி தொடங்கி 27ம்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

எக்ஸ்பிரஸ் ரயில்களை பொறுத்தவரை ஹவுராவில் இருந்து நெல்லை செல்லும் கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் (எண்.12665) வரும் 25ம்தேதி நாகர்கோவில் வரை மட்டுமே செல்லும். அந்த ரயில் நாகர்கோவில் – கன்னியாகுமரி இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் (எண்.16861) வரும் 24ம்தேதியன்று நெல்லையோடு நிறுத்தப்படும். அந்த ரயில் நெல்லை தொடங்கி கன்னியாகுமரி வரை பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக கன்னியாகுமரி – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (எண்.16862) வரும் 25ம்தேதி மாலை 3.40 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு செல்லும். இந்த ரயிலும் கன்னியாகுமரி – நெல்லை இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (எண்.20692) நாளை 21ம்தேதி, 23 முதல் 27ம்தேதி வரை என மொத்தம் 6 தினங்கள் நெல்லையில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

அதாவது அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் முதல் நெல்லை வரை பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரம் – திருச்சி இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண். 22628) வரும் 22ம்தேதி முதல் 27ம் தேதி வரை 6 தினங்களுக்கு நெல்லையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டு செல்லும். அந்த ரயில் திருவனந்தபுரம்- நெல்லை இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து நெல்லை வழியாக புனலூர் செல்லும் எக்ஸ்பிரஸ் (எண்.16729) வரும் 22ம்தேதி முதல் 27ம் தேதி வரை நாகர்கோவில் சந்திப்புக்கு செல்லாமல் பைபாஸ் வழியாக இயக்கப்படும். இந்த ரயிலுக்கு நாகர்கோவில் டவுனில் நிறுத்தம் வழங்கப்படும். மறுமார்க்கமாக புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ் (எண்.16730) வரும் 24ம்தேதி முதல் 28ம்தேதி வரை நாகர்கோவில் சந்திப்பு செல்லாமல், பைபாஸ் வழியாக செல்லும்.

தென்மாவட்டம் வராத குருவாயூர் எக்ஸ்பிரஸ்

இரட்டை ரயில்பாதை சிக்னல் பணிகள் காரணமாக சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில் வழியாக குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், தென்மாவட்டங்கள் பக்கமே தலைக்காட்டாது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் வரும் 23ம்தேதி 26ம்தேதி வரை 4 தினங்களுக்கு சென்னையில் இருந்து திண்டுக்கல் வந்து, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக குருவாயூர் செல்லும். மறுமார்க்கமாக குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரசும், வரும் 23ம்தேதி தொடங்கி 26ம்தேதி வரை பாலக்காடு, பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும். இந்த ரயிலுக்கு பொள்ளாச்சி, பாலக்காடு ஆகியவை கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும். 4 தினங்களிலும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் கொடைக்கானல் ரோடு தொடங்கி, கூடல் நகர், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில், இரணியல் ஆகிய தென்மாவட்ட பகுதிகளுக்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இரட்டை ரயில்பாதை சிக்னல் பணிகள் காரணமாக நெல்லை-நாகர்கோவில் பாசஞ்சர் ரயில் 23ம் தேதி முதல் 5 தினங்களுக்கு ரத்து appeared first on Dinakaran.

Tags : Passanger ,Nellai-Nagarko ,Nella ,Nella — ,Nagarko ,Antiodaya ,Puducherry Expresses ,Kumari district ,Dinakaran ,
× RELATED இந்திய அளவில் 576வது இடம் பிடித்து...