×
Saravana Stores

திருவாரூர் கோயிலில் நாளை ஆழித்தேரோட்டம்: 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நாளை ஆழித்தேரோட்டம் நடக்கிறது. திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரியது. 30 அடி உயரம், 30 அடி அகலத்தில் 300 டன் எடையுடன் தேர் ஆடி அசைந்தாடி வருவது கண்கொள்ளா காட்சியாகும். இக்கோயில் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தாண்டு விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் கடந்த ஜனவரி 25ம் தேதி நடைபெற்றது. மஹாத்துவஜா ரோகணம் எனும் கொடியேற்றம் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. நாளை (21ம் தேதி) ஆழித்தேரோட்டம் நடக்கிறது. ஆழித்தேரில் தியாகராஜசுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது. தனக்கே உரிய அஜபா நடனத்துடன் விட்டவாசல் வழியாக தியாகராஜசுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.

பின்னர் தேரில் தியாகராஜருக்கு இரவு சிறப்பு பூஜை நடைபெறும். நாளை காலையும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு 8.50 மணியளவில் ஆழித்தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. ஆழித்தேருக்கு முன் விநாயகர், சுப்ரமணியர் தேர்கள் காலை 5 மணியளவில் வடம் பிடித்து இழுக்கப்படும். ஆழித்தேருக்கு பின் கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம்பிடித்து இழுக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆழித்தேரோட்ட விழாவையொட்டி நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நகரை சுற்றி இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட உள்ளது.

The post திருவாரூர் கோயிலில் நாளை ஆழித்தேரோட்டம்: 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Azhitherotam ,Tiruvarur temple ,Thiruvarur ,Thiruvarur Thiagaraja Swamy temple ,Thiruvarur Thyagarajaswamy temple ,
× RELATED திருவாரூரில் பெய்து வரும் கனமழையால்,...