×

தூத்துக்குடி கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த 86 மீனவர்கள், 6 படகுகள் சிறைபிடிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் எல்லையிலிருந்து பொதுவாக 12 கடல் மைல் தொலைவில்தான் மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். அதை பின்பற்றாமல் தூத்துக்குடி மன்னார்வளைகுடா கடல் பகுதியில் கேரளாவை சேர்ந்த விசைப் படகுகள் அத்துமீறி மீன்பிடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. கேரள மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதை கண்டித்தும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சுமார் 250 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை தூத்துக்குடி கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த குளச்சல் பகுதியை சேர்ந்த 5 விசைப்படகுகளையும், கேரளாவை சேர்ந்த ஒரு படகையும், 86 மீனவர்களையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்து மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். நடுக்கடலில் இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே நடந்த மோதலில் 3 மீனவர்கள் காயமடைந்தனர். மீன்துறை அதிகாரிகள், தூத்துக்குடி மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கேரள மற்றும் குளச்சல் பகுதி மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தூத்துக்குடி கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த 86 மீனவர்கள், 6 படகுகள் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Kerala ,Thoothukudi Gulf of Mannar ,Dinakaran ,
× RELATED கோடைவெயில் தாக்கம் எதிரொலி...