×

17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் தொடக்கம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை வருகை

சென்னை: பிசிசிஐ சார்பில் 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் நடத்தப்படும் லீக் தொடர்களில் ஐபிஎல் தான் முதன்மையானதாக விளங்குகிறது. இதற்கு காரணம் ஐசிசி தொடர்களை விட அதிக அளவில் கிடைக்கும் வருவாய்தான். மற்ற தொடர்களை விட ஐபிஎல்லில் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கிறது. விளம்பர வருவாயும் ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல்லுக்கு இருக்கும் மவுசுதான் இதற்கு காரணம். இந்நிலையில் 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் அன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

முதல் போட்டிக்கு முன்பாக மாலை 6.30 மணி முதல் கண்கவர் தொடக்க விழா நடக்கிறது. ஏஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியுடன் நடிகர்கள் அக்‌ஷய் குமார், டைகர் ஷெராப், பின்னணி பாடகர் சோனு நிகம் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். தொடக்க விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிகிறது. புதிய சீசனுக்காக 10 அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக்பாண்டியா , சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பாட் கம்மின்ஸ்சும் புதிய கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற 8 அணிகளும் கடந்த சீசன் கேப்டன்கள் தலைமையிலேயே களம் காண்கின்றன. முதல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஒருவாரமாக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கேப்டன் டோனி, ஜடேஜா, ஷிவம்துபே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி உள்ளிட்ட அனைத்து வீரர்களுடன் புதிதாக ஷர்துல் தாகூர்,ரச்சின் ரவீந்திரா ,டேரில் மிட்செல் இணைந்துள்ளனர்.

டூபிளசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணியினர் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவந்தனர்.முன்னணி வீரரான விராட் கோஹ்லி கடந்த 2 நாட்களுக்கு முன் அணியுடன் இணைந்தார். நேற்று மகளிர் பிரீமியர் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணி வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. பின்னர் அணி வீரர்கள் அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். இந்நிலையில், முதல்போட்டிக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேப்டன் டூபிளசிஸ், விராட் கோஹ்லி உள்ளிட்ட அனைவரும் இன்று மாலை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று முன்தினம் ஆன்லைனில் தொடங்கிய நிலையில் சில மணிநேரத்திலேயே விற்றுதீர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

The post 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் தொடக்கம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை வருகை appeared first on Dinakaran.

Tags : IPL ,Royal Challengers Bangalore ,Chennai ,BCCI ,ICC ,Royal Challengers ,Bangalore ,Dinakaran ,
× RELATED 1 ரன் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ்...