×

குன்னூர் பாரஸ்டேல் பகுதியில் 8 நாட்கள் எரிந்த காட்டுத்தீ அணைந்தது

*55 ஏக்கர் வனப்பரப்பு நாசம்

ஊட்டி : குன்னூர் பாரஸ்டேல் பகுதியில் 8 நாட்கள் எரிந்த காட்டுத்தீ அணைக்கப்பட்டது. 8 நாளில் 55 ஏக்கர் வனப்பரப்பு எரிந்து நாசமாகின. நீலகிரி வன கோட்டம், குன்னூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பிளாக் பிரிட்ஜ் அருகேயுள்ள பாரஸ்ட் டேல் வனப்பகுதியில் கடந்த 12ம் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. அருகில் தேயிலை தோட்டத்தில் வைக்கப்பட்ட தீ எதிர்பாராதவிதமாக வனத்தில் பரவியதும், பலத்த காற்று வீசியதால், உறை பனி காரணமாக காய்ந்து இருந்த செடி, கொடிகளில் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்ததும் வனத்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தீயை அணைக்கும் பணி நடந்து வந்தது.

மாவட்ட வன அலுவலர் கவுதம் மேற்பார்வையில் நீலகிரி, பொள்ளாச்சி, கோவை, உடுமலைப்பேட்டை ஆகிய வன கோட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து விமானப்படையின் உதவி நாடப்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் ரேலியா அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீ பரவிய பகுதியில் தெளிக்கப்பட்டது. இதனால் தீ ஒரளவிற்கு கட்டுக்குள் வந்தது.

இருந்தபோதும் சில இடங்களில் புகை மற்றும் தீ ஏற்பட்டது. இதனையும் அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டனர். இந்த நிலையில் கடந்த 8 நாட்களாக எரிந்து வந்த காட்டுத்தீ நேற்று மதியம் அணைக்கப்பட்டது. இன்னும் ஓரிரு இடங்களில் புகை எழுந்த வருகிறது. அவற்றில் இருந்து தீ பரவாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாரஸ்டேல் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இதுவரை சுமார் 55 ஏக்கர் வரை வனம் எரிந்து நாசமானது.

The post குன்னூர் பாரஸ்டேல் பகுதியில் 8 நாட்கள் எரிந்த காட்டுத்தீ அணைந்தது appeared first on Dinakaran.

Tags : Coonoor Barrasdale ,Coonoor Parasdale ,Nilgiri Forest Division ,Coonoor forest ,Black Bridge ,
× RELATED சின்கோனா பகுதியில் 3 காட்டுமாடுகள் உயிரிழப்பு