×

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்

* சிசிடிவி கேமரா கண்காணிப்பு * கலெக்டர் ஆபீசில் ஏற்பாடு தயார்

ஊட்டி : நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அலுவலக வளாகம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் 1 தொகுதி என மொத்தமுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடக்கிறது. இதனை தொடர்ந்து தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று (20ம் தேதி) துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 27ம் தேதி ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 28ம் தேதி நடக்கிறது.

மனுக்களை திரும்ப பெற 30ம் தேதி கடைசிநாள். ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஊட்டி, குன்னூர் கூடலூர், மேட்டுப்பாளையம், பவானிசாகர் மற்றும் அவினாசி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டரிடம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். இதற்கிடையே இன்று (20ம் தேதி) வேட்புமனு தாக்கல் துவங்க உள்ள நிலையில், இதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு. தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் வரையிலும், வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து ஊட்டியில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் இருந்து ஊட்டி – கூடலூர் சாலையின் இருபுறம், புதுமந்து சாலை, மருத்துவமனை சாலை ஆகிய இடங்களில் 100 மீட்டர் என சாலையில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை சார்பில் பேரிகார்டுகள் வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ள மாவட்ட தேர்தல் அலுவலக இரு நுழைவு வாயில் பகுதி, வளாகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அறை என முக்கிய இடங்களில் 16 நவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த அலுவலகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இதுவரை ஒரு சுயேட்சை உட்பட இரண்டு பேர் மட்டுமே வேட்புமனு படிவங்களை வாங்கி சென்றுள்ளனர். வேட்புமனுக்களை இன்று 20ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள், என்றனர்.

நடத்தை விதிமுறை மீறியதாக இதுவரை 4 புகார்கள் பதிவு

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் இதுவரை 4 புகார்கள் பெறப்பட்டு அவை தீர்வு காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து, கடந்த 16ம் தேதி முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.பணம் மற்றும் பாிசு பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் நீலகிாி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூா் ஆகிய தொகுதிகளில் தொகுதிக்கு தலா 3 குழுக்கள் என மொத்தம் 9 பறக்கும் படைகள் மற்றும் 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. பறக்கும் படை மற்றும் நிலை மற்றும் கண்காணிப்பு குழுக்களின் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி, சுழலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் முறைகேடுகள் தொடா்பாக பெறப்படும் புகாா்களை இக்குழுவினர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று விசாாிக்கின்றனரா என மாவட்ட தோ்தல் அதிகாாி அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீலகிாி மாவட்டத்தில் உள்ள தேர்தல் பணிகளை கண்காணிக்கவும், புகார்களை பெறவும் மாவட்ட அளவில் 24 மணி நேரமும் செயல்பட கூடிய கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை நீலகிாி மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்கள் தொடர்பாக நேற்று வரை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக 3 புகார்களும், சிவிஜில் மூலமாக ஒரு புகாரும் வந்துள்ளது. கொடிக்கம்பங்கள், சுவரொட்டிகள் அகற்ற வேண்டும். மறைந்த தலைவர்களின் சிலைகள் மூடக்கூடாது என்பது போன்ற புகார்கள் வந்தன. அவற்றின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Nilgiri Parliamentary ,Dinakaran ,
× RELATED நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜ...