×

நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சேரன்மகாதேவி, சுரண்டையில் கொடி அணிவகுப்பு

வீரவநல்லூர் : நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சேரன்மகாதேவி, சுரண்டையில் கொடி அணிவகுப்பு நடந்தது. இதில் துணை ராணுவப்படையினர், ரயில்வே பாதுகாப்பு படையினர், போலீசார் என ஏராளமானோர் பங்கேற்றனர்.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப். 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது அனைத்து வாக்காளர்களும் எவ்வித அச்சமும் இன்றி நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போலீசார், துணை ராணுவப்படையினர், ரயில்வே பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அந்தவகையில் நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள் கையில் துப்பாக்கி ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். சேரன்மகாதேவி பேருந்து நிலையத்தில் துவங்கிய ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக பஸ் நிலையத்தை மீண்டும் வந்தடைந்தது. இதில் உள்ளூர் போலீசார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சுரண்டை: இதே போல் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சுரண்டையிலும் போலீசார், துணை ராணுவ படையினர், ரயில்வே பாதுகாப்பு படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடந்தது ஆலங்குளம் டிஎஸ்பி பர்னபாஸ் தலைமையிலான இந்த அணிவகுப்பு சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி திருமண மண்டபத்தில் துவங்கியது. பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் வழியாக சென்று சுரண்டை அழகு பார்வதி அம்மன் கோயில் திடலில் நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து சுரண்டை அடுத்த இரட்டைகுளம் பகுதியிலும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் செந்தில், எஸ்ஐ சின்னத்துரை, அலெக் மேனன், சதீஷ், அன்னலட்சுமி மற்றும் துப்பாக்கி ஏந்திய நூற்றுக்கணக்கான துணை ராணுவ படையினர், ரயில்வே போலீசார் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சேரன்மகாதேவி, சுரண்டையில் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Tags : Flag parade ,Surandai ,Cheranmahadevi ,Veeravanallur ,Election Commission ,Lok Sabha elections ,
× RELATED துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு