×

களியக்காவிளையில் டாரஸ் லாரிகள் அடுத்தடுத்து, ஆட்டோ மீன் வண்டி, வீடு மீது மோதல்

* டிரைவர்கள் தப்பி ஓட்டம்

* போக்குவரத்து பாதிப்பு

களியக்காவிளை : குமரி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் கனிம வளங்களை அதிகளவில் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு, தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.
சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கலெக்டர் மற்றும் எஸ்பி, கனிமவள லாரிகள் சாலையில் செல்வதற்கு நேர கட்டுப்பாடுகளை விதித்தனர். அதை மீறி சாலையில் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தனர். அதன்படி நேர கட்டுப்பாட்டை மீறி வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் காலி லாரி ஒன்று நாகர்கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி களியக்காவிளை பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மீன் வண்டியில் மோதியது. மேலும் அருகில் உள்ள வீடு மற்றும் கடையில் மோதி நின்றது. இதையடுத்து லாரி டிரைவர் தப்பியோடி விட்டார்.

லாரி மோதியதில் மீன் வண்டி குப்புற கவிழ்ந்து, அதில் இருந்த டிரைவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மற்றொரு லாரி களியக்காவிளை அருகே ஒற்றாமரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் நின்ற ஆட்டோவில் மோதியது. பின்னர் பள்ளிச்சுவரில் மோதி நின்றது. விபத்தை ஏற்படுத்தி விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார். இது குறித்தும் களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்துகளால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து, மாற்று பாதையில் வாகனங்களை அனுப்பி வைத்து போக்குவரத்தை சீர்செய்தனர்.

The post களியக்காவிளையில் டாரஸ் லாரிகள் அடுத்தடுத்து, ஆட்டோ மீன் வண்டி, வீடு மீது மோதல் appeared first on Dinakaran.

Tags : Kaliakawla ,Kumari ,Kerala ,Lantern ,Dinakaran ,
× RELATED அமித்ஷா குமரி வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!.