×

உரிய ஆவணம் இல்லாததால் ரூ.2 லட்சம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி

திருவொற்றியூர்: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும்படியான வகையில் பொருட்களோ, கணக்கில் வராத பணமோ எடுத்துச் சென்றால் அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பறக்கும் படை அதிகாரி மனோஜ் தலைமையில், மணலி காமராஜ் சாலையில் நேற்று முன்தினம் மாலை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் ரூ.1 லட்சம் இருந்தது. இதுகுறித்து பணம் கொண்டு வந்த நபரிடம் விசாரித்த போது, தான் மதுபான பார் உரிமையாளர் என்றும், பாரில் வசூலான பணம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பணத்திற்கு முறையான ஆவணங்களை காண்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டு, அந்த பணத்தை பறிமுதல் செய்து, மணலி மண்டல பறக்கும் படை உயர் அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல் திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புரசைவாக்கம் மேடவாக்கம் நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று அதிகாலை 2 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மேடவாக்கத்தில் இருந்து கெல்லீஸ் நோக்கி வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து அதிகாரிகள் விசாரித்ததில் காரை ஓட்டிச் சென்றவர் தி.நகர் எஸ்.பி. கோயில் தெருவை சேர்ந்த சர்வேசன் (36) என்பதும், தி.நகர் பகுதியில் தனது நண்பருடன் சேர்ந்து தனியார் கம்பெனி ஒன்றை நடத்தி வருவதாகவும், அதில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க இந்த பணத்தை கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு செல்லப்பட்டதால் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அதை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

The post உரிய ஆவணம் இல்லாததால் ரூ.2 லட்சம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Flying Squad ,Thiruvottiyur ,Dinakaran ,
× RELATED அதிமுக, பாஜவினரிடம் ₹1.76 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி