×

வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.7 கோடி கடன் பெற்று மோசடி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது

பூந்தமல்லி: சிட்டி யூனியன் வங்கியில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, ரூ.7 கோடி தொழில் கடன் பெற்று மோசடி செய்த 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சிட்டி யூனியன் வங்கி மேலாளர் விஜய கணேஷ் என்பவர், சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

ஆவடியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களும், காமதேனு நகைக்கடையை நடத்தி வந்தவர்களுமான விஷ்ணு சர்மா, சமத் பாய் சர்மா, வினோத் சர்மா, விவேக் சர்மா, சர்மிளா சர்மா, மற்றும் சப்னா சர்மா ஆகிய 6 பேர், எங்களது வங்கியில் வாங்கிய ரூ.7 கோடி கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வுப்பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வங்கியை ஏமாற்றும் நோக்கில், ஆவடி விளிஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள 3,474 சதுரடி காலி மனையை அடமானம் வைத்து கடன் பெற்றதும்,

இந்த சொத்து மீது ஒரு வழக்கு பூந்தமல்லி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும், இந்த உண்மையை மறைத்து மேற்படி சொத்தை அடமானமாக வங்கியில் சமர்பித்து தொழில் கடன் ரூ.7 கோடி பெற்றதும், அதில், ரூ.3 கோடி 15 லட்சம் வங்கிக்கு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த வினோத் சர்மா (47), இவரது சகோதரர் விவேக் சர்மா (41), சர்மிளா சர்மா (42), சப்னா சர்மா (36) ஆகியோரை நேற்று முன்தினம் ஆவடியில் வைத்து கைது செய்து எழும்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மோசடி கும்பலை கைது செய்த அதிகாரிகளை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினார்.

The post வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.7 கோடி கடன் பெற்று மோசடி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,City Union Bank ,Vijaya Ganesh ,Chennai ,Dinakaran ,
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்