மாமல்லபுரம்: கல்பாக்கம் அணுமின் நிலையம் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மாமல்லபுரம் அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலைய பிரதான நுழைவு வாயில் பகுதி முன்பு எடையூர் ஊராட்சிக்குட்பட்ட கொக்கிலமேடு பகுதியில் கிழக்கில் மீனவர் மக்களும், மேற்கு பகுதியில் கொக்கிலமேடு கிராம பகுதி, அம்பேத்கர் நகர் பகுதியும் அமைந்துள்ளது.
இங்கு, கடந்த 25 ஆண்டுகளாக அம்பேத்கர் நகர் குடியிருப்புகளில் திறந்தவெளி மழைநீர் கால்வாய் வழியாக சென்று மீனவர் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் சேர்கிறது. இந்நிலையில், கடந்த ஓராண்டாக கழிவுநீர் அதிகளவில் தேங்கியது. கொசுக்கள் உற்பத்தியால் டெங்கு உள்ளிட்ட நோய் பாதிப்பதாக கூறி மீனவர் பகுதி மக்கள் அம்பேத்கர் நகர் பகுதியில் இருந்து கழிவுநீர் தங்கள் பகுதிக்கு வரக்ககூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
மணல், கற்கள் மூலம் அங்குள்ள கால்வாயை அடைத்தனர். இதனை அறிந்த அம்பேத்கர் பகுதி மக்கள் கால்வாய் அடைப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறி விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டு கல்பாக்கம் அணுமின் நிலையம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் சென்ற பேருந்தை தடுத்து நிறுத்தி மீனவ மக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
இது குறித்து, தகவலறிந்த மாமல்லபுரம் (பொ) போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், மாமல்லபுரம் போலீஸ் எஸ்ஐ திருநாவுக்கரசு, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரி பிரகாஷ், மீனாட்சி, கொக்கிலமேடு ஊராட்சி மன்ற தலைவர் சாமூண்டீஸ்வரி நடராஜன் ஆகியோர் நேரில் வந்து கொக்கிலமேடு அம்பேத்கர் நகர் மற்றும் மீனவர் மக்கள் இரு தரப்பை அழைத்து சுமூகமான பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, மீனவர் பகுதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அம்பேத்கர் நகர் பகுதிக்கு 6 மாதங்களில் தனியாக கால்வாய் அமைத்து தரப்படும் என்றும், அதுவரை இரு தரப்பினரும் அமைதி காத்து எந்த வித பிரச்சனையும் செய்யக் கூடாது என அறிவுறுத்தினர். தொடர்ந்து, அடைக்கப்பட்ட கால்வாயில் கொட்டப்பட்ட மணல் மற்றும் கற்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் மீனவ மக்களுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, மீனவர்கள் கால்வாய் அடைப்பை அகற்றினர். மேலும், அங்கு கால்வாயில் தேங்கி நின்ற கழிவு நீரையும் லாரி மூலம் அகற்றப்பட்டது. பின்னர், அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 4 மணிநேரம் நீடித்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post கழிவுநீர் கால்வாய் அடைப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.