×

தமிழிசைக்காக களமிறங்க காத்திருக்கும் பாஜ நிர்வாகிகள்: கூட்டணி கட்சி வேட்பாளர்கள் கலக்கம்

சோழிங்கநல்லூர்: தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என பேசப்பட்டது. வட சென்னை அல்லது தென் சென்னையில் அவர் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக பாஜ மாநில தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்தபோது, அவருக்கான நிரந்தர ஆதரவாளர்கள் சென்னை மேற்கு மாவட்டத்திலும், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திலும் ஏராளமானோர் இருந்தனர். தற்போது அவருக்கான ஆதரவு குறைவில்லாமல் உள்ளது.

இதனால், தமிழிசை சவுந்தரராஜனை வடசென்னை அல்லது தென் சென்னையில் வேட்பாளராக அறிவித்தால் சென்னை மேற்கு பகுதியில் உள்ள பாஜ நிர்வாகிகள் குறிப்பாக பொதுக்குழு உறுப்பினர் சசிதரன், மாவட்ட தலைவர் மனோகரன், செயற்குழு உறுப்பினர் சென்னை சிவா, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், அழிஞ்சிவாக்கம் பாஸ்கரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் குமார் மாவட்ட பொதுச் செயலாளர் உள்பட ஏராளமான தொண்டர்கள் திருவள்ளூர் தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வேலை செய்யாமல் நேரடியாக தமிழிசை சவுந்தரராஜனுக்கு களத்தில் இறங்கி வேலை செய்ய தயாராக உள்ளனர் என பரவலாக பேசப்படுகிறது.

இதனால் கூட்டணி கட்சி வேட்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மக்களவை தேர்தலில் போட்டியிடும் தமிழிசைக்கு, தென் சென்னை அல்லது வட சென்னையில் பாஜ சார்பில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என பாஜவினர், கட்சி மேலிடத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

* இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை
பாஜவில் மாநிலத்தின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த தமிழிசைக்கு, ஏற்கனவே சட்டப்பேரவை மற்றும் மக்களவையில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் அவர் சொற்ப வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஆனாலும் அவருக்கு கவர்னர் பதவி அளித்து, கட்சி மேலிடம் அந்தஸ்தை கொடுத்தது. இருந்தபோதிலும் சட்டப்பேரவை அல்லது மக்களவையில் அடியெடுத்து வைக்காமல் ஓய மாட்டேன் என்ற வைராக்கியத்துடன் தமிழிசை தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதற்கிடையில், பாஜ கூட்டணி சார்பில் புதுச்சேரியில் வேட்பாளரை அறிவித்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கவர்னராக இருந்த அவர் போட்டியிட்டால், வெற்றி பெறலாம் என்ற கனவு பலிக்காமல் போனது. இதை பார்க்கும் அக்கட்சியினரே, இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுகிறார் என விமர்சனம் செய்கின்றனர்.

* விமர்சகர்கள் கருத்து
தமிழிசையின் குடும்பத்தினர் அனைவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பாஜவில் அவர் இணைந்து தீவிரமாக செயலாற்றி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளை விட தீவிரமாக பணியாற்றும் அவருக்கு, பாஜ சார்பில் மாநிலளங்களவை உறுப்பினராக பதவி வழங்கலாம். ஆனால் அதைப் பற்றி, மூத்த தலைவர்கள் சிந்திக்கவில்லை. பாஜவில் உழைக்கும் நிர்வாகிகளுக்கு இதே நிலை இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் பேசுகின்றனர்.

The post தமிழிசைக்காக களமிறங்க காத்திருக்கும் பாஜ நிர்வாகிகள்: கூட்டணி கட்சி வேட்பாளர்கள் கலக்கம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamilisai ,Chozhinganallur ,Tamilisai Soundarrajan ,Telangana ,Puducherry ,North Chennai ,South Chennai ,Alliance ,
× RELATED ஜூம் காணொலி பிரசாரத்தில் திடீர் ஆபாச வீடியோ: தமிழிசை அதிர்ச்சி