×

கட்டுமான தொழிலாளர் குடும்பங்களுக்கு வங்கி கடன் பெற நடவடிக்கை: மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் நடைபெற்ற கட்டுான தொழிலாளர்கள் சங்க மாநில செய்குழு கூட்டத்தில், ‘கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் முன்னேற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனுதவி பெற நடவடிக்கை எடுக்க சங்கத்தின் மூலம் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரை தலைமை இடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு உடல் உழைப்பு கட்டுமான தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கம். மதுராந்தகத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில், நேற்று முன்தினம் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் வி.ஜே.குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ராஜசேகர் அனைவரையும் வரவேற்றார். இதில், சங்க நிர்வாகிகள் கண்ணன், பழனியாச்சாரி, அர்ஜுனன் அபிராமி ராமு, ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக பாதிக்கப்பட்டோர் கழகத்தின் மாநில துணை தலைவர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அமான் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். இதில், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் முன்னேற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க கட்டுமான சங்கத்தின் மூலமாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வது, மழைக்காலங்களில் கட்டுமான பணிகள் கிடைக்காத தொழிலாளர்களுக்கு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுக்குள் வைக்க வேண்டும். எதிர்வரும் மே தினத்தன்று மதுராந்தகத்தில் நடைபெறும் பேரணியில் மாநிலம் முழுவதும் இருந்து திரளான தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கட்டுமான தொழிலாளர் குடும்பங்களுக்கு வங்கி கடன் பெற நடவடிக்கை: மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : State Executive Committee ,Madhurandakam ,Dinakaran ,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்