×

தைலாபுரம் தோட்டத்தில் நல்ல நேரம் பார்த்து ஒப்பந்தம் கையெழுத்து: பாஜ கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு: விருந்து கொடுத்த ராமதாஸ்

திண்டிவனம்: பாஜ கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடுகளை முடித்து வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இந்த சூழலில் தேஜ கூட்டணிக்குள், பாமகவை கொண்டுவர தமிழக பாஜ சில நாட்களாகவே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதேநேரத்தில் அதிமுகவும், பாமகவை தங்களது கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாமக எம்எல்ஏ அருள் சந்தித்து பேசினார். இதையடுத்து அதிமுக கூட்டணியில் பாமக இணைவது உறுதியானதாக தகவல்கள் வெளியாயின.

இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பாமக உயர்நிலை குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பாஜவுடன் கூட்டணி சேர முடிவெடுக்கப்பட்டது. இந்த கூட்டம் முடிந்தபின் பாஜவுடன் பாமக கூட்டணி அமைப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்கு நேற்று காலை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், மாநில நிர்வாகி வினோத் செல்வம் ஆகியோர் வந்தனர். அவர்களை அன்புமணி வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றார். உள்ளே சென்றதும் ராமதாஸ், அவரது மனைவி சரஸ்வதி ராமதாசிடம் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் ஆசி பெற்றனர். பின்னர் பாஜ நிர்வாகிகளிடம் இதுவரை பாமகவின் போராட்டங்கள், வெற்றி, ராமதாஸ் 46 முறை சிறை சென்றது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஜி.கே.மணி விளக்கி பேசினார்.

உடனே இந்த கூட்டணியின் மூத்த தலைவர் ராமதாஸ் என அண்ணாலை கூறினார். காலை 7.30 மணிக்கு நல்ல நேரம், ஒப்பந்தம் கையெழுத்து போடலாம் என எல்.முருகன் கூறினார். யாருடன் மனதையும் நாங்கள் புண்படுத்த விரும்பவில்லை. அதே நேரத்தில் கையெழுத்து போடலாம் என ராமதாஸ் ஒப்புதல் அளித்தார். ஒப்பந்தத்தை ராமதாசிடம் அண்ணாமலை காண்பித்தார். அதில் உள்ள விவரங்களை அவர் படித்து பார்த்தார். அப்போது பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகள் மட்டுமே ஒப்பந்தத்தில் இருந்தது. இதனால் சில சந்தேகங்களை ராமதாஸ் எழுப்பினார்.

உடனே தனி அறைக்கு ராமதாஸ், அன்புமணி ஆகியோரை அழைத்து சென்று அண்ணாமலை, எல்.முருகன் சுமார் 15 நிமிடங்கள் சந்தித்து பேசினர். பின்னர் ஒப்பந்தத்தில் முதலில் ராமதாஸ் கையெழுத்து போட்டார். பின்னர் அண்ணாமலை, அன்புமணி, எல்.முருகன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். இதன் மூலம் பாமகவுக்கு 10 தொகுதிகள் உறுதியானது. இந்த சந்திப்பு, ஒப்பந்தம் முடிய 2 மணி நேரம் ஆகிவிட்டது. பின்னர் ராமதாஸ் வீட்டில் பாஜவினருக்கு காலை விருந்து அளிக்கப்பட்டது.

* மாற்றம் முன்னேற்றம் என்னாச்சு? பதிலளிக்க மறுத்த அன்புமணி

பாஜகவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டபின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று பாமக முடிவு செய்துள்ளது. நாட்டின் நலன்கருதியும், பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக வேண்டும் என்கிற எண்ணத்திலும், தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரவே இந்த முடிவை எடுத்துள்ளோம். தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆள்பவர்களை மாற்ற வேண்டுமென்று மக்கள் ஆழமாகவே எண்ணுகிறார்கள். அதனை கருத்தில் கொண்டு நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும், என்றார். இதையடுத்து தமிழகத்தில் மாற்றம், முன்னேற்றம் அன்புமணி என்கிற கோஷத்தை முன்வைத்தீர்களா? அது என்ன ஆனது? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பிதற்கு அன்புமணி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

The post தைலாபுரம் தோட்டத்தில் நல்ல நேரம் பார்த்து ஒப்பந்தம் கையெழுத்து: பாஜ கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு: விருந்து கொடுத்த ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Thilapuram Estate ,Bamagawa ,BJP alliance ,Ramadas ,Tindivanam ,Thilapuram Gardens ,Tamil Nadu ,DMK alliance ,Thilapuram Garden ,Bamako ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் தொகுதியை பாமகவுக்கு...