×

பெண்களின் சக்திதான் எனக்கு பாதுகாப்பு: சேலம் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

சேலம்: பெண்களின் சக்திதான் எனக்கு பாதுகாப்பு. அதற்காகவே பெண்களை முன்னேற்றும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறோம் என்று சேலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். சேலத்தை அடுத்துள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாஜ சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் வரவேற்றார். கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக தலைவர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மத்திய அமைச்சர் எல்.முருகன், சரத்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: தமிழ்நாட்டில் எனக்கும் பாஜவுக்கும் கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆதரவு குறித்து தான் இப்போது நாடு முழுவதும் பேசப்படுகிறது. கோவையில் மக்கள் வெள்ளத்தில் நீந்தி பயணம் செய்து விட்டு சேலத்திற்கு வந்துள்ளேன். 400 தொகுதிகளில் நாம் பெறும் வெற்றி என்பது இந்தியாவை மட்டுமன்றி தமிழகத்தையும் நவீன வளர்ச்சிக்கு கொண்டு செல்லும். உட்கட்டமைப்புகளும், பொருளாதாரமும் மிகப்பெரும் வளர்ச்சி பெறும். விவசாயம் செழிக்கவும், மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நாம் கண்டிப்பாக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி ெபற்றாக வேண்டும். தமிழ்நாட்டில் இப்போது நமது தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலுப்ெபற்றுள்ளது. பாமக தலைவர் ராமதாஸ் நம்முடன் இணைய சம்மதித்துள்ளார். இதனால் நமது பலம் அதிகரித்துள்ளது. ராமதாசும், அன்புமணி ராமதாசும் திறமை, ஆற்றலோடு தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள். அவர்களின் கூட்டணி தமிழகத்தின் புதியமுன்னேற்றத்தை உருவாக்க உத்வேகம் அளிக்கும்.

நாட்டில் சக்தியின் வடிவமான பெண்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளது. அதை தீர்க்க வேண்டியதும், நமது கடமையாகும். நாங்கள் கொண்டு வந்துள்ள திட்டங்கள் எல்லாம் பெண்களுக்கு பெரும் பயன்தருகிறது. எனவே பெண்சக்தியை எப்போதும் பாதுகாப்போம். அந்த பெண்களின் சக்தி தான் எனக்கும் பாதுகாப்பு. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் பல திட்டங்களை பெண்களுக்காக கொண்டு வருவோம். பாஜ கூட்டணி பல பெரும் கனவுகளை மனதில் வைத்து இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் நவீன உட்கட்டமைப்புக்கு பலகோடி மதிப்பில் விரைவு சாலைகள் அமைக்கப்படும். 20க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படும். ஐ.டி.பார்க்குகள் தொடங்கி தொழில் துறையானது புதிய பாதையில் எடுத்துச்செல்லப்படும். இந்த வளர்ச்சிகள் அனைத்திலும் தமிழகத்தையும் இணைத்துச் செல்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

The post பெண்களின் சக்திதான் எனக்கு பாதுகாப்பு: சேலம் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Salem campaign rally ,Salem ,BJP ,campaign ,Kejjalnayakanpatti ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமூகமாக...