×

இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிட ஒன்றுபட்டு நிற்போம், வென்றுகாட்டியே தீருவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

சென்னை: ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிட, ஒன்றுபட்டு நிற்போம், வென்றுகாட்டியே தீருவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திமுகவுடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த பாஜ அரசின் மக்கள் விரோத மாநில உரிமைகளைப் பறித்த ஆட்சியை விரட்டிட, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களமே சரியான வாய்ப்பாகும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இந்தியா கூட்டணியில்-திமுகவிற்கு தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தோழமைக் கட்சியினருடன் ஏற்பட்ட கொள்கை உறவு, தேர்தல் கூட்டணியாக இணைந்து 2019 நாடாளுமன்றத் தேர்தல் களம், 2021 சட்டமன்றத் தேர்தல் களம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம், மாநகராட்சி-நகராட்சித் தேர்தல் களம் என அனைத்திலும் தொடர் வெற்றியைப் பெற்று வருகிறோம்.

ஐந்தாவது முறையாக தொடரும் இந்த கொள்கை அடிப்படையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ள தோழமைக் கட்சியினருக்கு உரிய வகையில் இடங்களை ஒதுக்கி, தொகுதிப் பங்கீடுகளைச் செய்யும் ஜனநாயகப்பூர்வமான நடைமுறையை திமுக தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடனான இந்தப் பயணத்தில், ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது. தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையையும் கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு, அனைத்துத் தோழமை இயக்கங்களிடமும் என் சார்பிலும் திமுக சார்பிலும் விளக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் இடம் ஒதுக்க இயலாமல் போன நிலையிலும், மதவெறி பாசிசத்தை வீழ்த்திடத் திமுக தலைமையிலான கூட்டணிக்குப் பக்கபலமாக இருப்போம் என அக்கட்சிகளின் நிர்வாகிகள் முடிவெடுத்து ஆதரவைத் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். அதுபோலவே, இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்ற முன்வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், நாற்பதும் நமதே, நாடும் நமதே என்கிற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். ஒன்றுபட்டு நிற்போம், வென்றுகாட்டியே தீருவோம்.

The post இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிட ஒன்றுபட்டு நிற்போம், வென்றுகாட்டியே தீருவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை appeared first on Dinakaran.

Tags : united ,Indian Union ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,DMK ,President ,Tamil Nadu ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!