×

திருப்போரூர் அருகே துப்பாக்கிகள் பறிமுதல் வழக்கு சிபிஐக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? காவல்துறை விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருப்போரூர் அருகே துப்பாக்கிகள் பறிமுதல் செய்தது தொடர்பாக, சிபிஐக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என்று பதிலளிக்குமாறு தமிழக காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்போரூர் அடுத்த இளலூர் அருகில், திருப்போரூர் போலீசார் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று பேசிக் கொண்டிருந்த பிரித்திவிராஜ், கார்த்திகேயன், வசந்த் ஆகிய மூவரிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் வந்த 2 கார்களை சோதனை செய்தபோது, அதில் 3 துப்பாக்கிகள் மற்றும் 163 தோட்டாக்கள், 57 வெளிநாட்டு மதுபாட்டில்கள், 250 கிராம் கஞ்சா ஆகியவை இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, பிரித்திவிராஜ் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், உரிமம் இல்லாத ஆயுதங்கள் வைத்திருந்த இந்த வழக்கில் முக்கிய நபரை சேர்க்காமல் காவல் துறையினர் விட்டு விட்டனர். எனவே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயேந்திரன் ஆஜரானார்.

அப்போது, துப்பாக்கி பறிமுதல் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் புலன் விசாரணையில் முன்னேற்றம் இல்லாவிட்டாலோ, விசாரணையே நடைபெறாவிட்டாலோ விசாரணையை மாற்றலாம். துப்பாக்கிகள் பறிமுதல் குறித்து சிபிஐக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என்று காவல்துறை தரப்பு விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

The post திருப்போரூர் அருகே துப்பாக்கிகள் பறிமுதல் வழக்கு சிபிஐக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? காவல்துறை விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,CBI ,High Court ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu Police Department ,Ilalur ,Dinakaran ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...