×

திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி அணிகள் மோதல் தமிழகத்தில் மும்முனை போட்டி: இன்று வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

சென்னை: திமுக, அதிமுக, பாஜ தலைமையிலான கூட்டணிகள் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி தமிழகத்தில் உருவாகியுள்ளது. இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் திமுக இன்று வேட்பாளர்களை அறிவிக்கிறது. அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்கிறது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அட்டவணையை கடந்த சனிக்கிழமை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார். மொத்தம் 7 கட்டங்களாக வாக்கு பதிவு நடத்தப்படும் என்றும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மார்ச் 27ம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். 28ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் வரும் ஏப்ரல் 19ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர், டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றால் பெடாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும். மேலும் வேட்பாளர் தரப்பில் தேர்தல் செலவினங்களுக்கு என புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அந்த வங்கி கணக்கு, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அதோடு, படிவம் 26 முழுமையாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். பிரமாண வாக்குமூலம் 20 ரூபாய் பத்திரத்தில் அளிக்க வேண்டும். வேட்புமனுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் போட்டோவை வழங்க வேண்டும். போட்டோவில் கட்சி சின்னங்கள், கொடிகள் உள்ளிட்ட எந்த அடையாளங்களும் இருக்கக்கூடாது.

இதுதவிர அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி வேட்பாளர்கள் என்றால் ஒரு முகவராலும், இதர வேட்பாளர்கள் 10 முகவராலும் முன்மொழிய வேண்டும். முன்மொழிபவர், வேட்பாளர் வேட்புமனு செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும். வேட்பு மனுதாக்கல் செய்யும் வேட்பாளர் வேறு நாடாளுமன்ற தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் கோருவதற்கு, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையிடத்தில் இருந்து படிவம் ஏ மற்றும் பி சமர்ப்பிக்க வேண்டும்.

நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனுதாக்கல் செய்யும்போது, வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு. வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்கள் 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் திமுகவைப் பொறுத்தவரை தொண்டர்கள், மக்கள் செல்வாக்கு, கூட்டணி பலத்துடன் போட்டியிடுகிறது. இதனால் தற்போதைய நிலவரப்படி 40 தொகுதிகளிலும் திமுக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் அதிமுகவைப் பொறுத்தவரை தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

பாஜவைப் பொறுத்தவரை பாமக மற்றும் ஏ.சி.சண்முகம், ஜான்பாண்டியன், பாரிவேந்தர் ஆகியோருடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் தமிழகத்தில் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. அதில் 2ம் இடத்துக்கு அதிமுக, பாஜ கூட்டணி இடையே போட்டி உருவாகியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கருத்து வெளியாகியுள்ளன. திமுகவில் இன்று காலை வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் இன்று வழங்கப்பட்டு கூட்டணி அறிவிக்கப்படுகிறது. இதனால் இரு முக்கிய கூட்டணிகள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளதால், தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* வேட்பு மனுதாக்கல் முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவு

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோவில் பதிவு செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு இன்று (20ம் தேதி) வேட்பு மனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்குகிறது. 27ம் தேதி பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். வேட்புமனு செய்யும்போது கண்டிப்பாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மனு தாக்கல் கடைசி நாளில் (27ம் தேதி) பகல் 3 மணிக்குள் வருபவர்களுக்கு வரிசைப்படி டோக்கன் வழங்கி, அவர்களின் வேட்பு மனுக்களை தேர்தல் அலுவலர் பெற்றுக் கொள்வர்.

அன்று பகல் 2 மணி முதல், மனுதாக்கல் நிறைவடையும் வரை தொடர் வீடியோ பதிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 28ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. அதற்கு முன்பு வரை விண்ணப்பங்களில் தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படும். 30ம்தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள். வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஆனாலும் மனு தாக்கலுக்கு வேட்பாளர் நேரில் வர வேண்டும். 3 வாகனங்களில் வேட்பாளர் உள்பட 5 பேர், மனு தாக்கலின்போது அனுமதிக்கப்படுவர். பொதுத்தொகுதிக்கு ரூ.25 ஆயிரம், தனி தொகுதிக்கு ரூ.12 ஆயிரத்து 500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பூத் ஸ்லிப் அச்சிடும் பணி வரும் 30ம் தேதி தொடங்கும். ஓட்டுப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பு வீடு வீடாக விநியோகிக்கப்படும்.

The post திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி அணிகள் மோதல் தமிழகத்தில் மும்முனை போட்டி: இன்று வேட்புமனு தாக்கல் ஆரம்பம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dimuka ,Adimuka ,Baja ,Chennai ,Bahja ,Supreme Court ,Bajaj ,Dinakaran ,
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்