×

ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறிய பாமக

சென்னை: 1991ம் ஆண்டு தனித்துப் போட்டியிட்ட பாமக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. பண்ருட்டி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். 1996ம் ஆண்டு வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான என்.டி. திவாரி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 4 எம்எல்ஏக்களைப் பெற்றது. 2001ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் நின்று 20 எம்எல்ஏக்களைப் பெற்றது. அதன்பின்னர் 2006ம் ஆண்டு திமுக கூட்டணியில் போட்டியிட்டு 18 எம்எல்ஏக்களை பெற்றது. பின்னர் 2011ல் திமுக கூட்டணியில் 3 எம்எல்ஏக்களை பெற்றது. 2016ல் தனித்துப் போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது. 2021ல் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 5 தொகுதில் வெற்றி பெற்றது.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை 1996ல் வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான என்.டி.திவாரி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, அனைத்து மக்களவை தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. பின்னர், 1998ல் நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜ கூட்டணியில் பாமக இணைந்து போட்டியிட்டது. அதில் 4 பேர் வெற்றி பெற்று எம்பியானார்கள். அதில் ஒருவருக்கு (தலித் எழில்மலை) ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

பின்னர், 1999ம் ஆண்டு திமுக, பாஜ கூட்டணியில் போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2 பேர் ஒன்றிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அதில் பேராசிரியர் பொன்னுச்சாமி, என்.டி.சண்முகம் ஆகியோர் ஒன்றிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர், 2004ல் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்ற பாமக 5 தொகுதியில் வெற்றி பெற்றது. அதில், ஏ.கே.மூர்த்தியும், வேலுவும் ஒன்றிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். 2009ல் அதிமுக, கம்யூனிஸ்ட் கூட்டணியில் பாமக போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது. 2014ம் ஆண்டு பாஜ, தேமுதிக கூட்டணியில் தர்மபுரியில் மட்டும் பாமக வெற்றி பெற்றது. 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில், அதிமுக, பாஜ கூட்டணியில் போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது. தற்போது 2024ல் பாஜ கூட்டணியில் போட்டியிடுகிறது.

2004ல் திமுக கூட்டணியில் இருந்த அன்புமணிக்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டது. அப்போது அவர் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2019ல் அதிமுக கூட்டணியில் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் அந்தப் பதவியில் தொடருகிறார். இவ்வாறு ஒவ்வொரு தேர்தலுக்கும் பாமக கூட்டணியை மாற்றி வருவது தமிழக மக்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

 

The post ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறிய பாமக appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Pamaka ,Former minister ,Panruti Ramachandran ,Panruti ,Vazhapadi Ramamurthy ,N.T. Tiwari ,Congress party ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்