×
Saravana Stores

நத்தம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு 3 ஆயிரம் பேருக்கு கமகமக்கும் கறிவிருந்து

நத்தம்: நத்தம் அருகே, கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு தயாரான கமகமக்கும் கறிவிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. காலையிலேயே பொதுமக்கள் அசைவ உணவை உண்டு ருசித்தனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே, உலுப்பக்குடி கிராமத்தில் வேட்டைக்காரன் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆண்கள் பங்கேற்கும் விநோதா திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின்போது பொதுமக்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய ஆடுகளை பலியிட்டு கறிவிருந்து தயார் செய்து பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்குவர். இந்தாண்டு கோயில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று இரவு ஊர் பொதுமக்களால் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 50 கிடாக்களை சுவாமிக்கு பலியிட்டு, 100 சிப்பம் அரிசியில் கமகமக்கும் கறிவிருந்தை தயார் செய்தனர்.

இதில், ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். விழாவையொட்டி முன்னதாக வேட்டைக்காரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து கறி விருந்து படையலிட்டு சுவாமி வழிபாடு நடந்தது. இதையடுத்து காலை 6 மணி முதல் கறிச்சமையல் அன்னதானமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. உலுப்பகுடி, நத்தம், புன்னப்பட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம் பட்டி, குட்டூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் பாத்திரங்களில் கறி விருந்து சமையலை வாங்கிச் சென்று குடும்பத்தாரோடு சாப்பிட்டு மகிழ்ந்தனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கறி விருந்து வழங்கப்பட்டது.

The post நத்தம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு 3 ஆயிரம் பேருக்கு கமகமக்கும் கறிவிருந்து appeared first on Dinakaran.

Tags : Kamagamakum ,Natham ,Nattam ,Dindigul district ,Swami ,Uluppakkudi ,Kamagamakum curry ,
× RELATED நத்தம் அருகே 10 அடிநீள மலைப்பாம்பு உயிருடன் மீட்பு