×

சட்டம் – ஒழுங்கு பிரச்னையால் மூடப்பட்ட திரெளபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி!!

சென்னை : சட்டம் – ஒழுங்கு பிரச்னையால் கடந்தாண்டு மூடப்பட்ட விழுப்புரம் மாவட்டம் திரெளபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுதா சர்வேஷ் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில், குறிப்பிட்ட சமூகத்தினரை அனுமதிக்கவில்லை எனக்கூறி சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, 2023 ஜூன் 7-ம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற வாதங்கள் பின்வருமாறு..

மனுதாரர்கள் தரப்பு : கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் : மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோவிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்

அரசு தலைமை வழக்கறிஞர் : மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாத வகையில் நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

தலைமை குற்றவியல் வழக்கறிஞர் : தினசரி பூஜைகளுக்காக கோவில் திறக்கப்பட்டால் பாதுகாப்புக்கு காவல் துறையினர் பணியமர்த்தப்படுவர். கோவிலுக்குள் மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி : கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கோவிலில் பூஜைகள் நடத்த அனுமதியளித்து உத்தரவிடுகிறோம். கோவிலில் பூஜைகள் செய்ய பூஜாரி ஒருவரை இந்து சமய அறநிலையத் துறை, விழுப்புரம் இணை ஆணையர் நியமிக்க ஆணையிடுகிறோம். பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிவிட வேண்டும். கோவிலுக்குள் பொது மக்களை அனுமதிக்க கூடாது. சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை யாரேனும் ஏற்படுத்த முயற்சித்தால், அவர்களுக்கு எதிராக காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கலாம்.ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால், கோயிலை மீண்டும் மூட உத்தரவு பிறப்பிக்கப்படும்

இவ்வாறு எச்சரித்து விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The post சட்டம் – ஒழுங்கு பிரச்னையால் மூடப்பட்ட திரெளபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Trilapati ,Amman Temple ,Chennai ,Chennai High Court ,Vilupuram district ,Sudha Sarvesh Kumar ,Karipalayam Village, Viluppuram District ,
× RELATED வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில்...