×

ஐபிஎல் தொடரில் அதிரடி ரிஷப் பன்டை பார்க்க முடியாது: கவாஸ்கர் கருத்து

மும்பை :ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாம் அதிரடி ரிஷப் பன்டை பார்க்க மாட்டோம் என்று சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். இந்திய அணியின் அதிரடி வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பன்ட் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கினார். தொடர் சிகிச்சையால் 14 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்த ரிஷப் பன்ட், தற்போது முழு உடல் தகுதியை பெற்றுள்ளார். ரிஷப் பன்ட் விக்கெட் கீப்பராகவே களமிறங்கலாம் என்று தேசிய கிரிக்கெட் அகாடமி அனுமதி அளித்திருக்கிறது.

இந்த நிலையில் ரிஷப் பன்ட் குறித்து கவாஸ்கர் கூறியிருப்பதாவது:- ரிஷப் பன்ட் பழைய மாதிரி அதிரடியாக விளையாடுவது கொஞ்சம் கடினம். இது குறித்து பேசிய அவர், ரிஷப் பண்ட், தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்த போது சில பயிற்சிகளை செய்திருக்கிறார். சில கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று இருக்கிறார். ஆனால் ஐபிஎல் போன்ற தொடரில் அவர் எடுத்த உடனே அதிரடியாக ஆடுவாரா என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அவருடைய முட்டி பகுதி இன்னும் பலம் பெற்று இருக்காது. விக்கெட் கீப்பராக பணியாற்றுவதும் சிரமமாக இருக்கும். எனவே ஐபிஎல் தொடரின் ஆரம்பப் போட்டிகளில் நாம் உண்மையான ரிஷப் பன்டை பார்க்க முடியாது. விக்கெட் கீப்பராக பன்ட், இருந்தால் அவர் எதையாவது பேசி பேட்ஸ்மேனின் கவனத்தை திசை திருப்புவார்.

அது எனக்கு மிகவும் பிடிக்கும். மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி கட்ட ஓவர்களில் அதிக ரன்களை கடந்த முறை விட்டுக் கொடுத்தது. அதனை தற்போது சரி செய்ய வேண்டும். பும்ரா அணியில் இருக்கிறார். அவருக்கு துணையாக வேறு எந்த வீரர் இருக்கப் போகிறார் என்பது குறித்து மும்பை அணி யோசிக்க வேண்டும். அது மட்டும் தான் மும்பை அணிக்கு குறையாக இருக்கிறது. பேட்டிங்கில் அவர்கள் பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறார்கள்.இதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கில், கேப்டன்ஷிப் சுமையால் கில்லின் பேட்டிங் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் எனக்கு உள்ளது என்றார்.

The post ஐபிஎல் தொடரில் அதிரடி ரிஷப் பன்டை பார்க்க முடியாது: கவாஸ்கர் கருத்து appeared first on Dinakaran.

Tags : Rishabh Pant ,IPL ,Gavaskar ,Mumbai ,Sunil Gavaskar ,IPL 2024 ,Dinakaran ,
× RELATED கேப்பிடல்சின் துல்லிய தாக்குதலில்...