×

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவிற்காக தயாராகும் பந்தல்: தக்கார், அறங்காவலர்கள் தலைமையில் ஏற்பாடு

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனைத்தொடர்ந்து ஆடி வீதி மற்றும் சித்திரை வீதிகளில் பந்தல் போடும் பணிகள் தொடங்கியுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் மிகச்சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா ஏப்ரல் 12ம் தேதி காலை 9.55 மணிக்கு மேல் 10.19க்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதன்படி அன்றைய தினம் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

இதனை தொடர்ந்து மீனாட்சி சுந்தரேசுவரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் வலம் வருவர். விழாவில் ஏப்.19ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 20ம் தேதி திக் விஜயமும் நடைபெறுகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் ஏப்.21ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடிவீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும்.

இதற்காக திருமண மண்டபத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிகம் வருகை தருவார்கள் என்பதால், அவர்கள் அமர்ந்திருக்க கோயில் வளாகத்தின் ஆடி வீதி மற்றும் வெளிப்பகுதியில் உள்ள சித்திரை வீதிகளில் பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

சித்திரை மாதத்தில் வெளுத்து வாங்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து, பக்தர்களை பாதுகாக்க சித்திரை வீதிகளில் பந்தல் அமைக்கப்படுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் பந்தல் நிழலில் அமர்ந்து ஓய்வெடுத்து செல்லலாம். இந்த பந்தல் 2 மாதம் வரை இருக்கும் என்பதால், அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்கும் வசதியாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

இதேபோல் கள்ளழகர் கோயிலிலும் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது. அவர் அழகர்கோயிலில் இருந்து புறப்பட்டு வழியெங்கும் உள்ள 500க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளை கடந்து மதுரை வந்து சேர்வது வழக்கம். இதற்காக மண்டகபடிகளை தயார் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே எதிர்சேவையை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப். 23ம் தேதி நடைபெறுகிறது. மதுரை, கோரிப்பாளையம் அருகே ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள வைகை ஆற்றுப்பகுதியை சீரமைத்து படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் தற்போது விரைவாக நடந்து வருகிறது.

இப்பகுதியில் பந்தல் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வினை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இதனால் வைகை வடகரை பகுதியில் ஆற்றங்கரையில் இருந்து பார்க்க வசதியாக கரையில் படிக்கட்டுகள் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிகள் குறித்து அறநிலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாக்களை வெகு சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலும், சித்திரை திருவிழாவும் ஒரே நேரத்தில் வருகிறது. இருப்பினும், அதற்கு தகுந்தவாறு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக கோயில்களில் பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. விழாவிற்கு தேவையாக பூக்கள், மாலைகள் உள்ளிட்டவற்றுக்கு ஆடர் கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். திருவிழா குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில், ‘‘மீனாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் உள்ளிட்ட வைபவங்களுக்கு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து செய்துகொடுக்க வேண்டும். கடந்த காலங்களில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு குறைபாடுகள் இருந்தன. அதுபோன்ற நிலை தற்போது வராதவாறு நிர்வாகத்தினர் சிறப்பாக செயல்பட வேண்டும்’’ என்றார்.

பல கோடி ரூபாய் மதிப்பில் பூக்கள்…
மீனாட்சியம்மன் கோயிலின் சித்திரை திருவிழா கடந்த வருடம் நடந்தபோது தக்கார் பொறுப்பில் கருமுத்து கண்ணன் இருந்தார். உடல்நிலை பாதிப்பால் அவர் திருவிழாவில் பங்கேற்கவில்லை. இதனால் கோயில் துணை கமிஷனர் அருணாச்சலம் தலைமையில் விழா நடைபெற்றது. தற்போது மீனாட்சியம்மன் கோயிலுக்கு தக்கார் மற்றும் அறங்காவலர்கள் உள்ளனர். இதனால் அவர்கள் தலைமையில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. இதையடுத்து திருவிழாவை வெகு சிறப்பாக நடத்த தேவையான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகள், பிரமாண்ட பந்தல், பல கோடி ரூபாய் மதிப்பில் பூக்கள் கொள்முதல், பக்தர்களுக்கு கோயிலின் உட்பகுதியில் ஏசி வசதி என ஏற்பாடுகளை தக்கார் மற்றும் அறங்காவலர்கள், கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவிற்காக தயாராகும் பந்தல்: தக்கார், அறங்காவலர்கள் தலைமையில் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Pandhal ,Madurai Meenakshiyamman Temple ,Thakkar ,Madurai ,Madurai Meenakshiyamman Temple Chitrai Festival ,Adi Road ,Chitrai Road ,Meenakshiyamman ,Temple ,painting ,
× RELATED மதுரை மீனாட்சியம்மன் கோயில்...