×

இயற்கையை பாதுகாத்து ஆற்றலை சேமித்து மாசற்ற உலகை உருவாக்க மறுசுழற்சி மிகவும் அவசியம் : சொல்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

மறுசுழற்சி என்பது கழிவுகள் அல்லது பயன்படுத்தப்பட்ட பொருட்களை புதிய பொருட்களாக மாற்றும் செயல்முறையாகும். இந்த மறுசுழற்சி என்பது சூழலியல், பொருளியல், அரசியல் மற்றும் கல்விநலன்களை கொண்டது. உதாரணமாக கழிவுப்பொருட்களை மறுசுழற்சி செய்யும் போது அவற்றை நிரப்பும் தளங்கள் குறையும். இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் தவிர்க்கப்படும். இதேபோல் நாம் மறுசுழற்சி செய்யும் ஒவ்வொரு பொருள் மூலமும் ஒரு நன்மை உண்டு.

நாம் பயன்படுத்தும் பொருட்களில் 75சதவீதம் கழிவுப்பொருட்கள் மறுசுழற்சி செய்யக்கூடியது. அவை மீண்டும் உருவாக்கப்பட்டு புதிய தயாரிப்புகளாக மாற்றுவதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டது. பிளாஸ்டிக், காகிதம், அட்ைட, கேன்கள், பேட்டரிகள், மரம், மக்கும் கழிவுகள், மின்னணு பொருட்கள், ஆடைகள், கண்ணாடிகள், உலோகங்கள் என்று இவற்றை அடுக்கிக் கொண்ேட போகலாம். ஆனால் மக்களிடம் மட்டுமன்றி பல்வேறு நிறுவனங்களிடமும் மறுசுழற்சி குறித்த ஆர்வம் போதிய அளவில் இல்லை.

இயந்திரமயமாகி விட்ட இன்றைய வாழ்க்கை சூழலில் கழிவுப்பொருட்களின் மறுசுழற்சி என்பது உலகளாவிய தேவையாக உள்ளது. எனவே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் 18ம்தேதி (இன்று) உலகளாவிய மறுசுழற்சி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மறுசுழற்சியின் அவசியம் குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இது குறித்து மாசுக்கட்டுப்பாடு சார்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: மறுசுழற்சி என்பது மிகவும் பயனுள்ள சில ெபாருட்களின் விரயத்தை தடுக்கிறது. உலகளவில் இயற்கை வளம் என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கமானது இயற்ைக வளத்தை முழுமையாக அழித்துவிடும் அபாயத்ைதயும் ஏற்படுத்தும். எனவே மிகவும் முக்கியமாக இயற்கை வளங்களை அழியாமல் காப்பதற்கு மறுசுழற்சி என்ற ஒன்று மிகவும் முக்கியமானது.

உதாரணமாக உலோகங்களை மறுசுழற்சி செய்யும் போது, புதிய உலோகத்தாதுவை பிரித்தெடுக்கும் தேவை குறைகிறது. கண்ணாடியை மறுசுழற்சி செய்வதால் மணல்போன்ற பொருட்களின் தேவை குறைகிறது. இதேபோல் ஆற்றம் சேமிப்புக்கும் மறுசுழற்சி என்பது மிகுந்த பயன் அளிக்கிறது. குறிப்பாக ஒரு கண்ணாடி பாட்டிலை மறுசுழற்சி செய்து 100வாட் மின்விளக்கை 4மணிநேரம் ஒளிரச்செய்ய முடியும்.

உலகம் முழுவதும் உற்பத்தியாகும் கழிவுகளில் பெரும்பாலானவை தொழிற்சாலைகளில் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 64சதவீதம் கழிவுகள் தொழிற்சாலைகளில் இருந்து வருவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. அதேபோல் தொழில்துறை கழிவுகள் பூமியின் மொத்த கழிவுகளில் அதிகபட்ச பகுதிகளை கொண்டுள்ளது. இப்படி தொழிற்சாலைகளில் இருந்து வரும் காகிதம், அட்டை, டயர்கள், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை மறுசுழற்சி செய்யும் போது இயற்கையும், சுற்றுச்சூழலும் தீங்கு நேராமல் காப்பாற்றப்படுகிறது. மேலும் இது பசுமை இல்லவாயு வெளியேற்றத்தை குறைக்கிறது.

காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடவும் மறுசுழற்சி வழிவகுக்கிறது. இவை அனைத்திற்கும் மேலாக நாம் எந்தஅளவில் மறுசுழற்சியை மேற்கொள்கிறோமோ, அந்த அளவுக்கு பணத்தையும் சேமிக்கிறோம் என்பதும் முக்கியமானது. எனவே இந்தநாளில் மறுசுழற்சி குறித்த ஆர்வத்தை மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அது இயற்ைகக்கும், சுற்றுச்சூழலுக்கும், நாட்டுக்கும் மட்டுமன்றி நமது வீட்டிற்கும் நன்மை தரும்.இவ்வாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறினர்.

பல்லுயிர் பெருக்கம்அதிகரிப்பதற்கு வழி
கழிவுகளின் குவிதல் என்பது ஒவ்வொரு அம்சத்திலும் மாசுவை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக காற்று மற்றும் மண்மாசுபடுவதற்கு கழிவுகளின் தேக்கம் என்பது முக்கிய காரணமாக உள்ளது. இவற்றின் மறுசுழற்சி என்பது பல்லுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நிலத்தில் தேக்கி வைக்கப்படும் கழிவுகள், குப்பைகள், தேவையற்ற பொருட்களை மறுசுழற்சி செய்வதால் சுரங்க நடவடிக்கைகள், நீர்மாசுபாடு, மண்அரிப்பு, மண்மாசுபாடு, காடுகள் அழிப்பு போன்றவை கணிசமாக குறையும். இது குறைந்துவிட்டால் மண்ணின் வளத்திற்கு தேவையான பல்லுயிர் பெருக்கம் என்பது அதிகரித்து விடும். இந்த வகையில் மறுசுழற்சி என்பது பல்லுயிர் பெருக்கத்திற்கும் வழிவகுக்கிறது என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

The post இயற்கையை பாதுகாத்து ஆற்றலை சேமித்து மாசற்ற உலகை உருவாக்க மறுசுழற்சி மிகவும் அவசியம் : சொல்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...