×

திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேரோட்டத்தையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோவிலாக இருந்து வரும் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆதித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும். இந்நிலையில் இந்த தேரோட்டமானது ஆண்டுதோறும் நடைபெறும் நிலையில் இதில் மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பர்.

அதன்படி இந்த தேரோட்டமானது நடப்பாண்டில் வரும் 21ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த தேரோட்டத்தின் பாதுகாப்பு பணிகள் குறித்து எஸ்.பி ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, இந்த ஆழித் தேரோட்டத்திற்காக 3 கூடுதல் எஸ்.பிகள், 19 டிஎஸ்பிக்கள் உட்பட திருவாரூர், நாகை, தஞ்சை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும் போக்குவரத்தினை சரி செய்யும் வகையில் ஒரு டிஎஸ்பி தலைமையில் 150 போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் நகருக்குள் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து திருவாரூர் நகருக்குள் வரும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா வழியாக திரும்பி செல்வதற்கும், தனியார் வாகனங்கள் பார்க்கிங் வசதிக்கு ரயில்வே குட்செட் பகுதியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,SP ,Jayakumar ,Tiruvarur Thiagarajaswamy Temple ,Adithera ,Thyagaraja ,Swamy ,Temple ,Thera ,Asian ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக...