×
Saravana Stores

திருப்பத்தூர் அருகே கள ஆய்வில் `புலிக்குத்திப் பட்டான்’ நடுகல் கண்டெடுப்பு:600 ஆண்டுகள் பழமையானது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த புலிக்குத்திப் பட்டான் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் ஆ.பிரபு, சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன், ஆய்வு மாணவர் தரணிதரன் ஆகியோர் திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி சுற்றுவட்டாரத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கி.பி. 15ம் நூற்றாண்டை சேர்ந்த ‘புலிக்குத்திப் பட்டான் கல்’ என்ற வரலாற்று சிறப்புமிக்க சிற்பத்தினை கண்டெடுத்தனர்.

இதுகுறித்து பேராசிரியர் பிரபு தெரிவித்துள்ளதாவது:
திருப்பத்தூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கும்மிடிகாம்பட்டி என்ற ஊரில் கரகப் பூசாரி வட்டம் என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பின் நடுவே ‘புலிக்குத்திப் பட்டான் கல்’ கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய வாசல் அமைப்பு கொண்ட கற்திட்டைக்குள் சிற்பம் காணப்படுகிறது. பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக நடுகல் அமைந்துள்ளது. நடுகல் நான்கரை அடி அகலமும் நான்கு அடி உயரமும் கொண்டாதாக உள்ளது. வலிமையான புலியுடன் மோதும் வீரனின் உருவம் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது. வீரனைத் தாக்குவதற்கு முன்னங்கால்களை தூக்கியபடி வாயைப் பிளந்த நிலையில் தாக்க வரும் புலி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தன்னைத் தாக்கப் பாய்ந்து வரும் புலியின் வாயில் தனது இடது கையால் ‘கட்டாரி’ என்ற குத்துக் கருவியை கொண்டு குத்திய நிலையில், வலது கையில் பெரிய வாளினை ஏந்தித் தாக்க முற்படும் நிலையிலும் காட்டப்பட்டுள்ளது.

அவ்வீரனின் நீண்ட காதுகளில் குண்டலமும், கழுத்தில் சரப்பளி என்ற இரண்டடுக்கு கழுத்தணி ஆபரணமும் காணப்படுகிறது. கைகளின் மணிக்கட்டுகள் மற்றும் புஜங்களில் காப்பினையும், கால்களில் கழலும் அணிந்துள்ளார். இடுப்பில் அழகிய சிறிய உடைவாள் மற்றும் கச்சும் குஞ்சமும் கூடிய ஆடையினை அணிந்துள்ளார். புலியுடன் மோதும் வீரன் என்பதால் அவனது வலிமையை விளக்கும் விதத்தில் வீரனின் உருவம் முறுக்கு மீசையுடன் கம்பீரமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வீரனுக்கு அருகில் சிறிய அளவில் அவரது மனைவியின் உருவம் காணப்படுகிறது. அதில் வலது கையில் கள் குடுவையும் இடது கையினை மேல் நோக்கி உயர்த்தியபடியும் வடிக்கப்பட்டுள்ளது.

அதாவது வீரன் இறந்த நிலையில் அவரோடு உடன்கட்டை ஏறிய அவரது மனைவியை நினைவு கூர்வதை இது குறிக்கிறது. கல்லின் மேல் பகுதியில் மாவிலைத் தோரணமும் மலர்களும் செதுக்கப்பட்டுள்ளது. பழந்தமிழகத்தில் நாடு காவல் செய்து, நல்லறம் பேணி, நானிலம் போற்ற வாழ்ந்து மடிந்த வீர மறவர்களுக்கு அவர்களின் செம்மார்ந்த வீரத்தினையும் தியாகத்தினையும் போற்றும் வகையில் நடுகற்கள் எடுத்து அந்த மாவீரர் நினைவுக்குப் படையல் செய்து வழிபட்டு வந்துள்ளனர்.

அவ்வாறு நடுகற்களை வணங்கினால் விவசாயம் செழிக்கும், நோய்நொடிகள் அகலும் என்று மக்கள் நம்பினர். இன்றளவும் அம்மரபு தொடர்வது வியப்புக்குரியதாகும். இப்பகுதியில் ஒருகாலத்தில் புலிகள் இருந்தமையும் இவ்வீரதீர செயல்கள் நடைபெற்றமையும் திருப்பத்தூர் மாவட்டத்தின் முற்கால வரலாற்றைப் பறைசாற்றுவனவாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

`கட்டாரி’ எனும் ஆயுதம்
வீரன் வைத்துள்ள ‘கட்டாரி’ என்ற ஆயுதம் சிறப்புத்தன்மை கொண்டதாகும். கட்டாரி என்பது இந்தியத் துணைக் கண்டத்தைப் பூர்வீகமாக கொண்ட ஒரு குத்துவாள் வகையாகும். நடுவிரல், ஆள்காட்டி விரலுக்கு இடையில் வைத்து பயன்படுத்தும் இக்குத்துவாளின் கைப்பிடியானது ‘H’ வடிவில் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.

இக்குத்துவாளானது மிகவும் பிரபலமானதும், தனித்துவமானதும் ஆகும். இன்றும் சில இடங்களில் வழிபாட்டுச் சடங்குகளில் கட்டாரிகள் இடம் பெற்றுள்ளன. இது குத்துவாள் என்ற பெயரில் தமிழில் அழைக்கப்படுகிறது. இது வடமொழியில் கட்டாரா அல்லது கட்டாரி என மருவியது. 14ம் நூற்றாண்டின் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் பெரும்பாலும் இக்கருவி புழக்கத்தில் இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

புலிக்குத்திப் பட்டான் நடுகல்
பண்டைய சமூகத்தில் கால்நடைகளே மக்களின் பெருஞ்செல்வமாக விளங்கின. மலைகளையும் காடுகளையும் ஒட்டி அமைந்துள்ள இடங்களில் கால்நடைகளை உணவாக உட்கொள்ள வரும் புலியானது, சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கிக் கொல்லும். அத்தகைய சூழலில் புலியைக் கொன்று கால்நடைகளையும் ஊர்மக்களையும் பாதுகாக்கும் எண்ணத்தில் வீரர்கள் புலியை வேட்டையாடிக் கொல்லச் செல்வார்கள்.

புலியை வேட்டையாடுகையில் அதனுடன் சண்டையிட்டு புலியைக் கொன்று, அதனால் ஏற்பட்ட பலத்த காயத்தால் தம் இன்னுயிரை நீத்த வீரர்களுக்கு நடுகல் எடுத்துப் போற்றும் வழக்கம் நம் தமிழகத்தில் இருந்தது. இவ்வாறு வீர மரணம் அடையும் வீரனின் நினைவாக எடுக்கப்படும் நடுகற்கள் ‘புலிக்குத்திப் பட்டான் நடுகற்கள்’ என அழைக்கப்படுகின்றன. எழுத்துப் பொறிப்பு கல் ஏதும் இல்லாத நிலையில் இந்நடுகற்களின் சிற்ப வேலைப்பாடுகள், ஆபரணம், ஆயுதம் ஆகியவற்றின் அமைப்பினை வைத்துப் பார்க்கும்போது விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்காலத்தை சேர்ந்தவையாகும்.

The post திருப்பத்தூர் அருகே கள ஆய்வில் `புலிக்குத்திப் பட்டான்’ நடுகல் கண்டெடுப்பு:600 ஆண்டுகள் பழமையானது appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Tirupathur ,Pulikuthi Pattan ,A. Prabhu ,Radhakrishnan ,Dharanidharan ,Kandili ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்...