சிவகாசி: சிவகாசி மாநகராட்சி ரத்தினம் நகரில் கண்களை கவரும் செயற்கை நீரூற்று, சிறுவர்கள் விளையாடி மகிழ ஊஞ்சல், முதியவர்கள் ஓய்வாக அமர இருக்கைகள் என மாநகராட்சி பூங்கா புதுப்பொலிவுடன் காட்சியளிப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகாசி மாநகராட்சியில் கந்தபுரம் காலனி, ஆயில்மில் காலனி, ரத்தினம் நகர், ஸ்டேண்டர்டு காலனி உட்பட பல்வேறு இடங்களில் 84 பூங்கா உள்ளது. இதில் பெரும்பாலான பூங்காக்கள் பயன்பாடின்றி காணப்பட்டது. தற்போது அனைத்து பூங்காவையும் அடையாளம் கண்டு சீரமைக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகாசி மாநகராட்சி ஜே. நகரில் ரூ.65 லட்சம் மதிப்பிலும், புதுக்காலனியில் ரூ.40 லட்சம் மதிப்பிலும், காரனேசன் காலனியில் ரூ.55 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பூங்காக்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் தங்கம்தென்னரசு திறந்து வைத்தார்.
இந்நிலையில் சிவகாசி மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள ரத்தினம் நகர் சிறுவர் பூங்கா சீரமைக்கும் பணிகள் கலைஞர் நூற்றாண்டு விழா திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. பூங்காக்களில் பழுதடைந்த சுற்றுச்சுவர்களை சீரமைப்பது, மின் விளக்குகள் அமைப்பது, பசுமையை ஏற்படுத்துவது, பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட பாதை, சிறுவர்கள் விளையாடி மகிழ ஊஞ்சல், முதியவர்கள் ஓய்வாக அமர இருக்கைகள், குரோட்டன்ஸ் செடிகள், பூச்செடிகள், செயற்கை நீரூற்று என அழகுற சீரமைக்கப்பட்டன.
பூங்காவில் செயற்கை நீரூற்று அருவியை சுற்றி மாறி மாறி ஒளிரும் வகையில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், இரவு நேரங்களில் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த செயற்கை நீரூற்றில் பலரும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இந்த பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். மாநகராட்சியின் இந்த முயற்சி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மாநகராட்சி கவுன்சிலர் ரேணுநித்திலா கூறும்போது, சிவகாசி மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள், மக்களுக்கு மனநிறைவு தரும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி எனது வார்டில் உள்ள ரத்தினம் நகர் பூங்கா சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது. பூங்கா சுவர்களிலும் பச்சை, மஞ்சள் நிறங்களில் வண்ணம் பூசி கண்ணுக்கு விருந்து படைத்து மனநிறைவு தருகின்றது. எனது கோரிக்கையை ஏற்று பூங்காவை சீரமைக்க உதவிய அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.
The post சிவகாசி மாநகராட்சி மக்கள் வரவேற்பு; புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ரத்தினம் நகர் பூங்கா appeared first on Dinakaran.