×

பாஜக- பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது: பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: பாஜக- பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியாக அறிவித்து வருகிறது. ஆனால் மெகா கூட்டணி அமைக்க போறோம் என்று கூறிய பாஜ, அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க யாரும் முன்வரவில்லை. குறைந்தபட்சம் டெபாசிட் வாங்க வேண்டுமென்றால் கூட்டணி அமைக்க வேண்டிய சூழலுக்கு அதிமுக, பாஜ தள்ளப்பட்டுள்ளது. இதனால் பாமக, தேமுதிக மற்றும் லெட்டர் பேட் கட்சிகளுடன் பேரத்தை தொடங்கியது அதிமுக, பாஜ. இதில் என்ன கூத்து என்றால் ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜவுடன் பாமக, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனால், இரண்டு கட்சிகளும் எந்த பக்கம் சாயலாம் என்று மதில் மேல் பூனையாக காத்திருந்தனர். ஒரு பக்கம் அன்புமணி மற்றும் பிரேமலதாவுடன் ஒன்றிய அமைச்சர்கள் ரகசியமாக சந்தித்து பதவி ஆசையை கூறி இழுக்க முயற்சித்தனர். இன்னொரு பக்கம் ராமதாஸ் மற்றும் பிரேமலதாவுடன் அதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதிமுக சார்பில் பாமகவுக்கு 7 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக கூறினர். பாஜ சார்பில் ஒன்றிய அமைச்சர் பதவி, 10 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக தெரிவித்தனர்.

ராமதாஸ் மற்றும் மாவட்ட செயலாளர்கள், ‘பாஜவுடன் சென்றால் ஓட்டு கேட்க முடியாது. எதிர்காலம் இருக்காது’ என கூறி அதிமுகவுடன் கூட்டணி செல்லலாம் என்று கூறினர். ஆனால், அன்புமணியிடம் டீலிங் பேசிய பாஜ, அவர் மீது உள்ள வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமென்றால் தங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று மிரட்டியதாக தகவல்கள் வெளியானது. இதனால் வழக்குக்கு பயந்தும், பதவிக்கு ஆசைப்பட்டும் பாஜவுடன் கூட்டணி செல்ல அன்புமணி முடிவு செய்து ராமதாசை சமாதானம் செய்தார். இதனால் பாமக எந்த பக்கம் சாயும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் எடப்பாடியை சேலம் பாமக எம்எல்ஏ அருள் சந்தித்து பேசினார்.

இதில் பாமக-அதிமுக கூட்டணி இறுதியானது என கூறப்பட்டது. இருப்பினும் உயர்நிலைக் குழு கூட்டத்துக்கு பின் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று பாமக தெரிவித்திருந்தது. இந்த சூழலில், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி தலைமையில் 19 பேர் கொண்ட உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று பிற்பகல் நடைபெற்றது. அதிமுகவுடன் நேற்று வரை கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய பாமக திடீர் திருப்பமாக பாஜக கூட்டணியில் இணைந்தது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து பா.ம.க. போட்டியிடும் என நேற்று அக்கட்சி பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிவித்தார்.

இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உடன் சந்தித்து பேசினார். கூட்டணி ஒப்பந்தத்தை படித்துப் பார்த்த பிறகு பாஜக – பாமக தலைவர்கள் தனி அறையில் ஆலோசனை நடத்தினர். பின்னர் பா.ஜ.க. பா.ம.க. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ஜ.க. – பா.ம.க. கூட்டணி ஒப்பந்தத்தில் ராமதாஸ், அண்ணாமலை கையெழுத்திட்டனர்.

The post பாஜக- பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது: பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : BJP ,Palamaka ,Palamgaon ,Chennai ,TAMIL NADU ,DIMUGA-LED COALITION PARTIES ,BAJA ,ATEMUKA ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...