×

சக்தி குறித்த பேச்சால் எழுந்தது சர்ச்சை: திசை திருப்பிய மோடி பதிலடி கொடுத்த ராகுல்

புதுடெல்லி: மும்பை பொதுக்கூட்டத்தில் சக்தி குறித்து ராகுல் பேசியதை பிரதமர் மோடி திசை திருப்பி பேசினார். அதற்கு ராகுல் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு நாள் பொதுக்கூட்டம் மும்பையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்தியா கூட்டணியை சேர்ந்த 28கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி,’பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டம் தனிப்பட்ட அளவில் இல்லை.

ஏனெனில் மோடி ஒரு ‘சக்தி’ (அதிகாரம்)க்காக வேலை செய்யும் முகமூடி. ஆனால் ஒரு முகம் முன்னிறுத்தப்பட்டுள்ளது. இந்து தர்மத்தில் ‘சக்தி’ என்ற வார்த்தை உள்ளது. நாங்கள் ஒரு ‘சக்தி’ (அதிகாரம்’)க்கு எதிராக போராடுகிறோம்’ என்றார். சக்தி என்பதை அதிகாரம் என்று குறிப்பிட்டு ராகுல் பேசினார். ஆனால் சக்தியை தெய்வ வடிவமாக பிரதமர் மோடி திசை திருப்பி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில்,’’சக்தி’யை அழிக்க நினைப்பவர்களுக்கும் அதை வழிபடுபவர்களுக்கும் இடையே சண்டை.

அவர்கள் தங்கள் பேச்சில், தங்கள் போராட்டம் ‘சக்தி’க்கு எதிரானது என்றார்கள். என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தாயும், ஒவ்வொரு மகளும் ‘சக்தி’யின் வடிவம். தாய்மார்களே, சகோதரிகளே, நான் உங்களை ‘சக்தி’ என்று வணங்குகிறேன். நான் பாரத மாதாவின் பூசாரி. ஆனால் இந்தியா கூட்டணியின் கொள்கையை சக்தியை அழிப்பது. நான் அவர்களது சவாலை ஏற்கிறேன். இந்த நாட்டில் உள்ள தாய்மார்கள், சகோதரிகள் பாதுகாப்பிற்காக எனது வாழ்வைையே தியாகம் செய்ய நான் தயார்’ என்றார்.

மோடி பேச்சு குறித்து ராகுல் ஆவேச பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில்,’பிரதமர் மோடி எனது வார்த்தைகளை திரித்து பேசியுள்ளார். மோடிக்கு என் வார்த்தைகள் பிடிக்கவில்லை. நான் ஒரு ஆணித்தரமான உண்மையைப் பேசினேன் என்று அவருக்குத் தெரியும். அதனால்தான் அவர் எப்போதும் போல் ஏதாவது ஒரு வழியில் அவற்றைத் திரித்து அர்த்தத்தை மாற்ற முயற்சிக்கிறார்.நான் குறிப்பிட்ட அந்த அதிகார சக்தியின் முகமூடிதான் மோடி. அதற்கு எதிராக நாங்கள் போராடுகிறோம்.

அப்படிப்பட்ட ஒரு சக்திதான் இன்று இந்தியாவின் குரல், இந்தியாவின் அமைப்புகள், சிபிஐ, ஐடி, இடி, தேர்தல் ஆணையம், ஊடகங்கள், இந்திய தொழில்துறை, இந்தியாவின் முழு அரசியலமைப்பு அமைப்பையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளது. அதே ‘சக்தி’ (அதிகாரத்தை) பயன்படுத்தி, பிரதமர் மோடி இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி கடன்களை தள்ளுபடி செய்கிறார். அதே நேரத்தில் ஒரு இந்திய விவசாயி சில ஆயிரம் ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்.

அதே ‘சக்தி’க்கு (அதிகாரம்) இந்தியாவின் துறைமுகங்கள், இந்தியாவின் விமான நிலையங்கள் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியாவின் இளைஞர்களுக்கு அவர்களின் தைரியத்தை உடைக்கும் ‘அக்னிவீரன்’ பரிசு வழங்கப்படுகிறது. அதே சக்திக்கு இரவும் பகலும் வணக்கம் செலுத்தும் போது, ​​நாட்டின் ஊடகங்கள் உண்மையை மறைக்கின்றன. அதே அதிகாரத்தின் அடிமையாக இருக்கும் மோடி, பணவீக்கத்தை கட்டுப்படுத்தாமல் நாட்டின் ஏழைகள் மீது ஜிஎஸ்டியை திணித்து, அந்த சக்தியின் பலத்தை அதிகரிக்க நாட்டின் செல்வத்தை ஏலம் விடுகிறார்.

அந்த சக்தியின் பலத்தை, அதை வைத்து மோடி செய்வதை நான் புரிந்து கொண்டேன். இது எந்த வகையான மதவாத சக்தியும் அல்ல, அது அநீதி, ஊழல் மற்றும் பொய்யின் சக்தி. அதனால்தான் நான் அதற்கு எதிராக குரல் எழுப்பும் போதெல்லாம் மோடியும், அவரது பொய் இயந்திரமும் வருத்தமும், கோபமும் அடைகிறது’ என்று தெரிவித்தார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ‘பிரதமர் மோடி மக்களின் கவனத்தை திசை திருப்பும் ஒரு மாஸ்டர்.

பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் நாட்டு மக்கள் போராடி வருகிறார்கள். இளைஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் லட்சக்கணக்கான தொழில்கள் நாசமடைந்தன. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்களின் அறிக்கைகளை திரித்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவதுதான் பிரதமரின் முன்னுரிமை பணியாக உள்ளன’ என்று குறிப்பிட்டார்.

* அசூர சக்தியா தெய்வீக சக்தியா
மோடி பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன்கேரா கூறுகையில்,’ ராகுல் காந்தி ‘அசூர சக்தி’(பா.ஜ)யை தாக்கிய பேசியதால், பிரதமர் மோடி வருத்தமடைந்துள்ளார். இந்த தேர்தல் ‘அசூர சக்தி’ மற்றும் ‘தெய்வீக சக்தி’ இடையே நடக்கும் மோதல். பெண் மல்யுத்த வீரர்கள் துன்புறுத்தப்பட்டபோது, ​​பிரிஜ் பூஷன் ஷரண் சிங் அவரது வீட்டில் தைரியமாக இருந்த போது, ​​பிரதமரின் ‘சக்தி’ வழிபாடு எங்கே இருந்தது?.

இந்த நாடு இனி பேய் சக்தியால் இயங்காது, தெய்வீக சக்தியால் நடத்தப்படும். 10 ஆண்டுகளுக்கு முன்பு, கதுவா, உன்னாவ் மற்றும் ஹத்ராஸ் ஆகிய இடங்களில் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆதரவாக பா.ஜ நின்றபோது ​​​​சக்தியை வணங்கியது மோடிக்கு நினைவில் இல்லையா. மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக ஓட வைத்த போது, ​​எந்த சக்தி உங்களை அமைதியாக வைத்து இருந்தது?. இந்த தேர்தலில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார். இந்திய தாய் வெல்வார்’ என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறுகையில், ‘மணிப்பூரில் பேய் கும்பலின் கொடூரத்தைப் பார்த்தும், இந்து மதம் மற்றும் அதிகாரத்தைப் பற்றி பேசுபவர்கள் அமைதி காத்தனர். டெல்லியில் நம்பிக்கைக்குரிய மகள்களை மிதித்ததைப் பற்றி மவுனம் காத்தனர்.

கான்பூரில் இரண்டு மைனர் சிறுமிகள் தூக்கில் தொங்கிய போதும், ஹத்ராஸின் கொடூரம் நடந்தது குறித்தும் அமைதியாக இருந்தார். இவை அனைத்தும் அதிகாரத்தின் வடிவங்கள். கடந்த 10 ஆண்டுகளில் இந்த நாட்டின் மகள்களுக்கு இழைக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தை யாரும் மறக்கவில்லை. ஒரு வெற்று மனிதனை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும் சக்திகள் அம்பலமாகியுள்ளன. ‘வசூல் மனிதன்’ இப்போது திகைத்து நிற்கிறார்’ என்று தெரிவித்துள்ளார்.

The post சக்தி குறித்த பேச்சால் எழுந்தது சர்ச்சை: திசை திருப்பிய மோடி பதிலடி கொடுத்த ராகுல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul ,New Delhi ,Mumbai ,Senior ,Congress ,Rahul Gandhi ,Indian Unity Justice Yatra ,
× RELATED மாஸ்கோவில் மோடி மணிப்பூரில் ராகுல்: காங்கிரஸ் தாக்கு