×

ரூ.4 லட்சம் கடன் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.81 ஆயிரம் அபேஸ்

தாம்பரம்: மேற்கு தாம்பரம், கன்னடபாளையம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி திவ்யா (26). இவர், தாம்பரத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவரது வீட்டிற்கு ஏசி மற்றும் கட்டில் ஆகியவற்றை தனியார் பைனான்ஸ் நிறுவனம் மூலம் தவணை முறையில் வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை மாதம்தோறும் வங்கி கணக்கு மூலம் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், அவரை செல்போனில் தொடர்புகொண்ட ஒருவர், ‘‘நான் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன். எங்கள் நிறுவனத்தில் நீங்கள் பெற்ற கடனை மாதம்தோறும் தவறாமல் கட்டி உள்ளீர்கள். இதனால், உங்களது சிபில் ஸ்கோர் நன்றாக உள்ளது. எனவே, உங்களுக்கு எளிய தவணையில் ரூ.4 லட்சம் கடன் தருகிறோம்’’, என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கு திவ்யா சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சேவை கட்டணமாக சிறுக சிறுக ரூ.81,500 வரை கூகுள் பே மூலம் அவர் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு முறையும் பணம் கட்ட சொல்லும்போதும் கடன் தொகை தயாராக இருக்கிறது. நீங்கள் பணத்தை கட்டினால் உங்களுக்கு உடனடியாக கடன் கிடைத்து விடும் எனக்கூறி பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர், மேலும் பணம் செலுத்த வேண்டும் என அந்த நபர் தெரிவித்ததால், சந்தேகமடைந்த திவ்யா, தனக்கு கடன் வேண்டாம் நான் கட்டிய பணத்தை எனக்கு திரும்ப கொடுங்கள் என கேட்டுள்ளார். ஆனாலும், பணத்தை தர மறுத்த மர்ம நபர் தொடர்ந்து திவ்யாவிடம் பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார்.

இதனையடுத்து, தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள அந்த பைனான்ஸ் நிறுவனத்திற்கு திவ்யா நேரில் சென்று கேட்டபோது நீங்கள் பணம் அனுப்பியதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், எந்த கிளையில் இருந்து உங்களுக்கு போன் செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது எனவும் அலட்சியமாக கூறி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த திவ்யா, இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், திவ்யாவிடம் சிஎஸ்ஆர் வழங்கி அனுப்பியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்தும் திவ்யாவின் செல்போன் எண்ணிற்கு தினமும் தொடர்பு கொண்டு பணம் செலுத்துங்கள் கடன் தர தயாராக இருக்கிறோம் என தொல்லை செய்துள்ளனர். இதனால், திவ்யா மற்றும் அவரது உறவினர்கள் நேற்று தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள அந்த பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும், கஷ்டப்பட்டு சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை ஏமாற்றி விட்டீர்கள் எனக்கூறி, இதற்கு ஒரு முடிவு தெரியாமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என வாக்குவாதம் செய்து அந்த அலுவலகத்திலேயே அமர்ந்து கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாம்பரம் போலீசார், அவர்களை சமாதானம் செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்று சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ரூ.4 லட்சம் கடன் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.81 ஆயிரம் அபேஸ் appeared first on Dinakaran.

Tags : Abes ,Tambaram ,Karthik ,Pilliyar Koil Street, Kannadapalayam, West Tambaram ,Divya ,
× RELATED பெண் சாப்ட்வேர் இன்ஜினியரிடம்...