செங்கல்பட்டு: 60 வயதில் மட்டும் அல்ல 18 வயதிலும் பக்கவாதம் வரலாம் என்பதை கல்லூரி மாணவி வர்ஷாவுக்கு ஏற்பட்ட நிகழ்வு உணர்த்தியுள்ளது. வழக்கம்போல், கல்லூரிக்குச் சென்று வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவி வர்ஷாவுக்கு திடீரென்று தலை சுற்றல், மயக்கம் உருவாகி, கை-கால் இயக்கம் தடைபட்டு அவர் மயங்கி விழுந்தார். வகுப்பறையில் இருந்த நண்பர்களின் உதவியுடன் அவர் காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் சானந்த் சரவணன், ராஜேஷ் ஆகியோர் வர்ஷாவின் மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவின் காரணமாக பக்கவாதம் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக பக்கவாதத்துக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவை அலர்ட் செய்து மாணவியின் உயிரைக் காப்பாற்றினர். இதற்கு த்ரோம்போலிசிஸ் எனப்படும் சிகிச்சை முறையை மருத்துவக்குழு கையாண்டு பாதிக்கப்பட்ட கை, கால்களும் முழுமையாக இயங்க வழி செய்தனர். இதில், முக்கிய அம்சமே, இந்த சிகிச்சை மற்றும் செயல்பாடுகள் அனைத்துமே வெறும் 15 நிமிடங்களுக்குள் நடந்து முடிந்ததுதான்.
மாணவி வர்ஷா மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கிறார். ஆனாலும், இளம் வயதினருக்கு அரிதாக ஏற்படக்கூடிய இந்த பக்கவாதத்திற்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிய, மருத்துவக் குழுவினர் இதர பரிசோதனைகளை செய்ய உள்ளனர். இந்த மருத்துவக் குழுவில் டாக்டர்கள் இளங்குமரன், இளந்திரையன், ராபர்ட் வில்சன், ஆர்த்தி ராஜேந்திரன், மூத்த ஆலோசகர் சானந்த் சரவணன், உதவி பேராசிரியர் ராஜேஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதுகுறித்து டாக்டர் இளங்குமரன் கூறுகையில், முதலில், மாணவிக்கு நாங்கள் ஒரு சிடி ஸ்கேன் எடுத்தோம்.
அது மூளையில் பாதிக்கப்பட்ட இடத்தை காட்டியது. பின்னர் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் அதை உறுதிப்படுத்தினோம். அது ஒரு ரத்த உறைவு என கண்டறியப்பட்டது. எங்கள் கதிரியக்கக் குழு ஸ்கேன்களை விரைவாக எடுக்க உதவியது. நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் உதவியுடன் த்ரோம்போலிசிஸ் செய்யப்பட்டது. 18 வயது மாணவி பக்கவாதத்தால் பாதிக்கப்படுவது அசாதாரணமானது என்பதால், அதற்கான காரணங்களை கண்டறிய மருத்துவ குழுவினர் அவருக்கு இதர சோதனைகளை நடத்த உள்ளனர். இது அவருக்கு எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க உதவும் என்றார்.
The post மூளையில் ரத்த உறைவு பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நவீன சிகிச்சை: எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.