×

பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக பிரதமர் மோடி நாளை சேலம் வருகிறார்! 2700 போலீசார் பாதுகாப்பு

சேலம்: பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக, பிரதமர் மோடி நாளை சேலம் வருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 2700 போலீசார் ஈடுபடுகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம்தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக பாஜ பிரசார பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறது. இந்த வகையில், சேலம், நாமக்கல், கரூர் தொகுதிகளுக்கான பாஜ பிரசார பொதுக்கூட்டம், சேலம் பனமரத்துப்பட்டி பிரிவு அருகேயுள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி மைதானத்தில் நாளை (19ம் தேதி) மதியம் நடக்கிறது.

இந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக, கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து ஹெலிகாப்டரில் சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பொதுக்கூட்டத்துக்கு பிரதமர் மோடி நாளை மதியம் 12.30 மணிக்கு வருகிறார். அப்போது அங்கு மக்களை சந்தித்த பின், பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதற்காக பிரசார மேடை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சோதனை முறையில் ஹெலிகாப்டர் வந்து இறங்கி சென்றது. பிரதமர் வருகையை முன்னிட்டு, பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும், மத்திய பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்ட பகுதி, அவர் சேலம் காமலாபுரம் விமான நிலையம் சென்று டெல்லிக்கு திரும்புவதால் விமான நிலைய பகுதி ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி தலைமையில், சேலம் சரக டிஐஜி உமா உள்ளிட்ட 4 டிஐஜிகள், சேலம் மாவட்ட எஸ்பி அருண்கபிலன் உள்பட 12 எஸ்பிக்கள், 18 கூடுதல் எஸ்பிக்கள், 32 டிஎஸ்பிக்கள் மற்றும் 60 இன்ஸ்பெக்டர்கள், 208 எஸ்ஐக்கள், 2,399 போலீசார் என ஒட்டுமொத்தமாக 2,731 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பிரதமர் வருகையையொட்டி, சேலம் மாவட்ட எஸ்பி அருண்கபிலன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் இன்று (18ம் தேதி) முதல் நாளை வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜ நிர்வாகிகள் கூறுகையில், ‘சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நாளை (19ம் தேதி) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மதியம் 1 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பேசுகிறார். இதில், பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என 1 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்’ என்றனர்.

The post பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக பிரதமர் மோடி நாளை சேலம் வருகிறார்! 2700 போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Salem ,BJP General Assembly ,protection ,MODI ,BAJA ,Tamil Nadu ,2700 Police Protection ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...