×

அதிமுக கொடி,இரட்டை இலை சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து தீர்ப்பு!!

சென்னை: அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்தார். இந்நிலையில், மனு மீதான விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நடைபெற்றது.

அப்போது ஓ.பன்னீர் செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அவர்கள் வாதிடும்போது, கட்சியின் சின்னம், கொடியை பயன்படுத்த தங்களுக்கு தடை விதிக்கப்பட்டால் தேர்தல் ஆணையத்தை நாட முடியாத நிலை ஏற்படும் என்று கூறினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா என்று கேட்டார்.அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், தேர்தல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது தவறு என்று எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை.ஒருங்கிணைப்பாளர் என்று அவர் தன்னை அழைத்துக்கொள்வதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதை எதிர்க்கிறோம். வேறு கட்சி தொடங்கி ஒருங்கிணைப்பாளர் என்று அழைத்துக்கொள்ளட்டும் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களை ஏற்று கொண்டு, அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிடப்பட்டது. மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என ஒபிஎஸ் அறிவித்து இருந்த நிலையில் நீதிமன்றம் இவ்வாறு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை,”அதிமுக என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி வருகிறது. விதிகளை மீறி சின்னம், கொடியை பயன்படுத்துவது தவறு,”எனத் தெரிவித்தார்.

The post அதிமுக கொடி,இரட்டை இலை சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து தீர்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Paneer ,Selvam ,Chennai ,iCourt ,Paneer Selwat ,Edappadi Palanisamy ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் தேர்தல் முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு