×

நீண்ட இழுபறிக்கு பிறகு நாடாளுமன்ற தேர்தலில் ராமதாசுடன் அதிமுக குழு இன்று மாலை பேச்சு.! 20ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

சென்னை: நீண்ட இழுபறிக்கு பிறகு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாமக, தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் 20ம் தேதி கையெழுத்தாகிறது. அதிமுக குழுவினர் இன்று மாலை திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துப் பேசுகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிக்கும் முதல் கட்டமாக வருகிற ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 20ம் தேதி (நாளை மறுதினம்) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதிமுக, பாஜ அணியினர் தங்கள் கட்சியுடன் யார் யார் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்கள் என்று இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் இரண்டு கட்சி தொண்டர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் அதிமுகவுடன் பாமக, தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி சேரலாம் என்றும், இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் 20ம் தேதி (நாளை மறுதினம்) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியுடன் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பாமக நிறுவனர் ராமதாசை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் பண்ைண வீட்டில் இரண்டு முறை ரகசியமாக சந்தித்து பேசினார். இதனால் அதிமுக – பாமக இடையே கூட்டணி அமைக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் 7 நாடாளுமன்ற தொகுதியும், ஒரு மாநிலங்களவை சீட்டும் தந்தால் கூட்டணியில் சேர்வோம் என்று ராமதாஸ் கெடு விடுத்திருந்தார். அதுவும் நாங்கள் கேட்ட தொகுதிகளையே தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனால் அதிமுக தலைமை பேச்சுவார்த்தையை தள்ளிக்கொண்டே போனது. இந்த நிலையில் ராமதாஸ் மகனும் பாமக கட்சியின் தலைவருமான அன்புமணி பாஜக மேலிட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது தமிழகத்தில் குறிப்பிட்ட தொகுதி வழங்குவதுடன், ஒரு மாநிலங்களவை எம்பி சீட் வழங்குவதுடன் ஒன்றிய அமைச்சர் பதவியும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அன்புமணி ரகசியமாக டெல்லி பாஜக தலைவர்களை சந்தித்து பேசியதற்கு பாமக நிர்வாகிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற இருந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பாமக நிர்வாகிகள் அதிமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் பாமக கேட்ட தொகுதி மற்றும் நிபந்தனைகளை ஏற்க அதிமுக நிர்வாகிகள் மறுத்தாலும், வேறு வழியில்லாமல் ஏதாவது ஒரு பெரிய கட்சி கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக அதிமுக தலைவர்கள் பாமகவை கூட்டணியில் சேர்க்க தற்போது முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி இன்று தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாகிகளிடம் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவிடமும் பாமக நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் பாமக கேட்ட 7 நாடாளுமன்ற தொகுதி, ஒரு மாநிலங்களவை சீட் கொடுக்க அதிமுக முன்வந்துள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் நாளை மறுதினம் (20ம் தேதி) எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது.

இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக குழு, ராமதாசை சந்தித்து கூட்டணியை இறுதி செய்கின்றனர். அதேபோன்று, அதிமுக – தேமுதிக இடையே இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தேமுதிக 5 தொகுதி, ஒரு மாநிலங்களவை சீட் கேட்டு வந்தனர். ஆனால், அதிமுக தரப்பில் இறுதியாக 3 தொகுதிகள் மட்டுமே தேமுதிகவுக்கு தர முடியும் என்றும், மாநிலங்களவை சீட் வழங்க முடியாது என்று உறுதியாக கூறி விட்டது. இதனால், விரக்தி அடைந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 எம்பி சீட்டுக்கும் போட்டியிட விரும்புகிறவர்கள் 19ம் தேதி (நாளை), 20ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் விருப்ப மனு அளிக்கலாம். 21ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று நேற்று அறிவித்தார். ஆனாலும், தேமுதிக நிர்வாகிகள் அதிமுக கூட்டணியில் தொடர விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அதனால், அதிமுக கொடுக்கும் சீட்டை பெற்றுக் கொண்டு கூட்டணியில் இடம்பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 20ம் தேதி (நாளை மறுதினம்) எடப்பாடி பழனிசாமியுடன் தேமுதிகவும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளது.

The post நீண்ட இழுபறிக்கு பிறகு நாடாளுமன்ற தேர்தலில் ராமதாசுடன் அதிமுக குழு இன்று மாலை பேச்சு.! 20ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது appeared first on Dinakaran.

Tags : Adimuga Committee ,Ramdas ,Chennai ,Palamaka ,Demudika ,Supreme ,Adimuka ,Thailapuram Dhatta ,Dindiwan ,Adimuka committee ,Dinakaran ,
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...