மதுரை: சென்னையில் இருந்து மதுரை ரயில் நிலையத்துக்கு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அப்போது பச்சிளம் குழந்தையுடன் ரயிலில் இருந்து இறங்கி செல்ல முயன்ற நபர், குழந்தையை கடத்தி செல்வதாக நினைத்து அவரை பிடித்து ரயில் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டம், சாமியார்பட்டியை சேர்ந்த பாக்கியராஜ் என தெரியவந்தது.
தனது மனைவி கங்காதேவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் குழந்தையை பிரித்து தூக்கி வந்ததும் தெரிந்தது. இதனையடுத்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே குழந்தை மீண்டும் பசியால் அழத் துவங்கியது. இதையடுத்து அங்கு ரயிலுக்காக காத்திருந்த பெண் பயணிகளிடம் குழந்தைக்கு தாய்ப்பால் தரும்படி ரயில்வே போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது கோவை ரயிலை பிடிப்பதற்காக அவசர கதியில் வந்த பெண் ஒருவர், குழந்தையின் பசியை அறிந்து அதற்கு தாயுள்ளத்துடன் பால் புகட்டி பசியாற்றினார்.
இதனால் நெகிழ்ந்த சக பயணிகள் மற்றும் ரயில்வே போலீசார், அந்த பெண்ணை பாராட்டி இனிப்பு வழங்கி வழியனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு வந்த தாய் கங்காதேவியிடம் குழந்தையை போலீசார் ஒப்படைத்தனர். கணவன், மனைவிக்கு அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர்.
The post மனைவியை பிரிந்த கணவர் பசியால் கதறிய குழந்தை பாலூட்டிய தாயுள்ளம்: மதுரை ரயில் நிலையத்தில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.