- தேர்தல்
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி
- சென்னை விமான நிலையம்
- விஸ்தாரா ஏர்லைன்ஸ்
- மும்பை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ரகுலகந்தி சூறாவளி
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று காலை 9.40 மணியளவில் மும்பை செலும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை புறப்பட்டு சென்றார். முன்னதாக, அவர் விமானநிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, இந்தியா கூட்டணி சார்பில், திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகம் மற்றும் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் ராகுல் காந்தி சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பிரசாரம் செய்வதற்கான பயணத் திட்டங்கள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து, அதற்கான சுற்றுப்பயண திட்டங்கள் வகுப்பதற்காக மும்பை செல்கிறோம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக-காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி அதிக வாக்கு வித்தியாசத்தில் 40 தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்.
தேர்தல் பத்திரங்களில் அரசியல் கட்சிகள் பெற்ற நிதிகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று சுமார் 500க்கும் மேற்பட்ட எஸ்பிஐ வங்கிகளின் முன்பு காங்கிரஸ் கட்சிதான் போராட்டம் நடத்தியது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி பதிலளிப்பாரா? நேற்று மாலை நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்பு, தமிழ்நாட்டில்தான் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறப் போகிறது என்பதை பிரதமர் மோடி எப்படி அறிந்து கொண்டார்? அதனால்தான் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி அடிக்கடி வந்து சென்றாரா?
இதையெல்லாம் பார்க்கும்போது, நாடாளுமன்றத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் சுயமாக நடத்துகிறதா? இல்லையேல், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறதா என்று அனைத்து மக்களிடையே பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி பதில் சொல்லியே ஆகவேண்டும். இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். பின்னர் விமானத்தில் மும்பை புறப்பட்டு சென்றார். அவருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.
The post நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக 40 தொகுதிகளிலும் ராகுல்காந்தி சூறாவளி பயணம்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.