×

போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் எனக்கூறி நூதன முறையில் பேசி பணம் பறிக்கும் வடமாநில கும்பல்

ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்தந்த சூழலுக்கு ஏற்றார்போல் தங்களை அப்டேட் செய்து கொண்டு மோசடி கும்பல்கள் பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. ஏமாந்தே பழக்கப்பட்ட பொதுமக்களும் மீண்டும் மீண்டும் புதிய வழிகளில் ஏமாறுவது போலீசாரையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. செல்போன் வளர்ச்சி ஏற்பட்ட பின்பு பல்வேறு வகைகளில் பொதுமக்கள் ஏமாற தொடங்கியுள்ளனர். வட மாநிலத்தில் இருந்து ஒரு கும்பல் அலுவலகம் போட்டு எப்படி ஏமாற்றலாம் என்று பயிற்சி வகுப்புகளை எடுத்து தொடர்ந்து செல்போன் மூலம் பொதுமக்களை மூளைச் சலவை செய்து அல்லது மிரட்டி ஏமாற்றி பணம் பறித்து வருகிறது.

ஒவ்வொரு வழக்கையும் விசாரிக்க போலீசார் வட மாநிலம் நோக்கி செல்ல முடியாது என்ற காரணத்தினால் இது போன்ற மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு காலகட்டத்தில் ஓடிபி எண் கூறினால் மட்டுமே நமது வங்கிக் கணக்கில் உள்ள பணம் பறிபோகும் என்ற சூழ்நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது பல வகைகளிலும் வங்கி கணக்கில் உள்ள பணம் பறிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தனி மனித அடையாளம் என ஒன்றிய அரசு கூறிய ஆதார் அட்டை விவரங்கள் தற்போது அனைவர் கையிலும் கிடைக்கும் ஒரு அற்ப பொருளாக மாறிவிட்டது.

ஒருவ்ர ஆதார் எண்ணை வைத்து அவர் எத்தனை வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார், அவரது பான் கார்டு எண், செல்போன் எண், வங்கி கணக்கு எண், முகவரி உள்ளிட்ட பல விஷயங்களை மோசடியில் ஈடுபடுபவர்கள் எடுத்து விடுகின்றனர். இதனால் கஷ்டப்பட்டு செய்ய வேண்டிய பல வேலைகளை அவர்கள் எளிய முறையில் செய்து விடுகின்றனர். இதனை பயன்படுத்தி தொடர்ந்து மோசடி கும்பல் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களாகவே வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி ஓடிபி எண் வாங்கி, மோசடியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பிறகு குறிப்பிட்ட ஒரு லிங்க் அனுப்பி, அதனை டவுன்லோட் செய்தால் உங்களுக்கு பணம் வரும் அல்லது வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என மோசடி அறிவிப்புகளை கொடுத்து குறிப்பிட்ட அந்த லிங்கை தொடும்போது நமது பணம் பறிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு பல்வேறு வகைகளில் பொது மக்களை ஏமாற்றி வந்த நபர்கள், தற்போது பொதுமக்களை மிரட்டி பணத்தை பறிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

அதன்படி, கடந்த சில நாட்களாகவே போதைப்பொருள் சம்பந்தமான செய்திகள் அதிகளவில் வெளிவருகின்றன. மேலும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய மர்ம கும்பல், தங்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் என்றும், மும்பையில் உள்ள அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் கூறி தற்போது மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 2 சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இதில், காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாரதி என்ற பெண்ணை இரு தினங்களுக்கு முன்பு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், இந்த முகவரிக்கு போதைப்பொருள் பார்சல் வந்திருப்பதாகவும், உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது, எனவும் கூறியுள்ளனர். இதனால், பயந்து போன பாரதி, என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்துள்ளார். அப்போது, வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க எங்களது வங்கி கணக்கில் பணம் அனுப்ப வேண்டும் எனக் கூறி ₹21,400 பணத்தை வாங்கியுள்ளனர். இந்தியன் வங்கி கணக்கு மூலம் இந்த பரிவர்த்தனை நடந்துள்ளது. அதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த இரு தினங்களுக்குள் புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட ஓட்டேரி பகுதியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஓட்டேரி நார்த் டவுன் பகுதியில் வசித்து வருபவர் ராம் திலக். இவர் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனுஷா (33). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன், அனுஷாவின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.  அதில் பேசிய நபர், போதைப் பொருள் தடுப்பு பிரிவு மும்பை அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களது ஆதார் எண் மூலம் போதை பொருட்கள் சீனாவுக்கு கடத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக விலை உயர்ந்த போதை பொருட்கள் உங்களது ஆதார் எண் மூலம் சென்றுள்ளது எனக் கூறியுள்ளனர். இதனால் நாங்கள் உங்களை விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதன் பிறகு உடனடியாக தங்களது இணைப்பை துண்டித்து விட்டு, ஸ்கைப் எனப்படும் இன்டர்நெட் கால் மூலம் மீண்டும் அனுஷாவை தொடர்பு கொண்டு 20 நிமிடங்கள் வரை பேசியுள்ளனர். அப்போது அவர்கள் மும்பை அலுவலகத்தில் உள்ள ஒரு ஐபிஎஸ் அதிகாரி அலுவலகத்தில் பேசுவது போல குறிப்பிட்ட ஆவணங்களை தயார் செய்து, அதில் அனுஷா மற்றும் அவரது ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களை வைத்துக்கொண்டு உங்கள் மீது எத்தனை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம் என விலாவாரியாக வழக்கு பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளனர். மேலும் உங்களது வங்கிக் கணக்கில் பல கோடி பணம் பரிவர்த்தனை நடந்துள்ளது எனவும் கூறியுள்ளனர். அதற்கு மறுமுனையில் பேசிய அனுஷா, எனக்கு ஹெச்டிஎப்சி வங்கியில் வங்கி கணக்கு கிடையாது எனக் கூறியுள்ளார். மேலும் மிகவும் சாதுரியமாக பேசியுள்ளார்.

அதற்கு மறுமுனையில் பேசியவர்கள் வேறு எந்த வங்கியில் வங்கி கணக்கு வைத்துள்ளீர்கள் என கேட்டுள்ளனர். ஆனால் அனுஷா அதைக் கூற மறுத்துவிட்டார். ஒவ்வொரு கேள்வியாக கேட்டு அதன் மூலம் அவரது வங்கி கணக்கு பற்றிய தகவல்களை அறிய முயன்றுள்ளனர். ஆனால் அனுஷா அதனை தவிர்த்து விட்டார். அதன் பிறகு அனுஷா என் மீது போதைப் பொருள் சம்பந்தமான வழக்கு உள்ளது என்றால் சென்னை கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அவர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள் எங்களை நேரில் அழைத்து விசாரிப்பார்கள், அல்லது எங்களை கைது செய்வார்கள் என தைரியமாக கூறியுள்ளார்.

இதனால் சுதாரித்துக் கொண்ட வட மாநில கும்பல் தொடர்பை துண்டித்து விட்டனர். இதில் முழுக்க முழுக்க மோசடி கும்பல் ஆங்கிலத்தில் பேசியுள்ளனர். அதன் பிறகு அனுஷா நடந்தவற்றை தனது கணவர் ராம் திலக்கிடம் கூறியுள்ளார். அதன் பிறகு அவரது வழிகாட்டுதலின் பேரில் புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர்‌. அவர்கள் கொடுத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை வைத்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டணமில்லா உதவி எண்: எதிர்பாராதவிதமாக ஒரு நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மோசடி நபர்களின் மிரட்டலுக்கு பயந்து நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடாதீர்கள். ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள் போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களை தொலைபேசி அல்லது ஆன்லைனில் பகிரக்கூடாது. இதுதொடர்பாக ஏதேனும் மிரட்டல்கள் வந்தால், உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். பின்னர் சைபர் க்ரைம் கட்டணமில்லா உதவி எண் 1930ல் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.

அச்சப்பட தேவையில்லை: புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் இதுபற்றி கூறுகையில், கடந்த சில நாட்களாக இதுபோன்று போதைப்பொருள் தடுப்புப்பிரிவு மற்றும் சிபிஐயில் இருந்து பேசுவதாக எந்த ஒரு அடையாளமும் இல்லாத நபர்கள் பொதுமக்களிடம் போனில் பேசி வருகின்றனர். பொதுமக்கள் இதுபோன்று தொலைபேசி அழைப்புகள் வந்தால் எங்களது லோக்கல் போலீசை தொடர்பு கொள்ளுங்கள் என பேசி அழைப்பை துண்டித்து விட வேண்டும். இல்லை என்றால் இதுகுறித்து தொலைபேசி மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களிடம் நீண்ட நேரம் பேசுவதால் நமது மூலமாகவே அவர்கள் நமது ஆதாரங்கள், ஆதார் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்டவற்றைப் பெற முயற்சி செய்கின்றனர். அதற்கு பொதுமக்கள் இடம் கொடுத்து விடக்கூடாது. பார்சல் வருகிறது, உங்கள் மீது வழக்கு உள்ளது, எப்ஐஆர் போட வேண்டும் என பல நூதன முறைகளில் பொதுமக்களை அவர்கள் ஏமாற்றுகின்றனர். பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் இதுபோன்ற அழைப்புகளை கண்டு அச்சப்பட வேண்டியது இல்லை. தைரியமாக அருகில் உள்ள காவல் நிலையங்களிலோ, அல்லது அவசர உதவி எண் 100ஐயோ தொடர்பு கொண்டு மோசடி நபர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்,’’ என்றார்.

2 மாதங்களில் 390 பேர் புகார்: சென்னை சூளைமேட்டில் உள்ள தொழிலதிபர் ஒருவரை, சமீபத்தில் தொடர்புகொண்ட இந்த மோசடி நபர்கள், உங்கள் பெயரில் போதைப்பொருள் பார்சல் பதிவு செய்துள்ளதாக கூறி ₹6 கோடி வரை, பல வங்கி கணக்குகள் மூலம் பறித்துள்ளனர். பாதிக்கப்பட்ட தொழிலதிபர் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களில் மாநில சைபர் க்ரைம் இணையதளம் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் 390 பேர் புகார்கள் அளித்துள்ளனர். அந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்து மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வீடியோ அழைப்பில் மிரட்டல்: தமிழ்நாடு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களாக தொழிலதிபர்களை குறிவைத்து மர்ம நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட பார்சலில் சட்டவிரோத போதைப்பொருட்கள் வந்துள்ளது. இந்த பார்சலை மும்பை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதற்கு ஆதாரமாக தொடர்பு கொண்ட நபர்களின், ஆதார் அட்டை, பார்ஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி அதை உறுதி செய்து, ஸ்கைப் வீடியோ அழைப்பில் மிரட்டி, கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் பல கோடி ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டி, வங்கி கணக்குகள் மூலமாக பணத்தை பரிமாற்றம் செய்து மோசடி செய்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போனில் இதுபோன்ற அழைப்புகள் வந்தால், உடனே போலீசில் புகார் அளிக்கலாம்,’’ என்றார்.

The post போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் எனக்கூறி நூதன முறையில் பேசி பணம் பறிக்கும் வடமாநில கும்பல் appeared first on Dinakaran.

Tags : North ,Narcotics Control Division Police ,
× RELATED வடகிழக்கு மாநில மக்களை மோடி அரசு...